எகிப்தில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த மலேசிய மாணவர் விடுதலை

புத்ராஜெயா, செப்டம்பர் 26 :

எகிப்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் மலேசிய மாணவர் நேற்று செப்டம்பர் 24 அன்று மாலை விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த மாணவர் நலமுடன் இருப்பதாகவும், அவர் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர்வார் என்றும் தெரிவித்தார்.

கெய்ரோவில் உள்ள மலேசியத் தூதரகம் மற்றும் கோலாலம்பூரில் உள்ள எகிப்திய தூதரகம் மூலம் மாணவர்களின் நலன் காக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, வெளியுறவு அமைச்சகம் எகிப்தின் வெளியுறவு அமைச்சகத்துடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளது என்று அவர் கூறினார்.

“இந்த விஷயத்தில் நெருக்கமான ஒத்துழைப்பிற்காக எகிப்து அரபுக் குடியரசின் அரசாங்கத்திற்கு மலேசிய அரசாங்கம் பாராட்டுகளைத் தெரிவிக்கிறது,” என்று அவர் கூறினார்.

வெளிநாட்டில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் தமது அமைச்சகம் தொடர்ந்தும் கவனம் செலுத்திவருகிறது என்று சைஃபுடின் கூறினார்.

மேலும் மலேசியர்கள் அவர்கள் இருக்கும் நாட்டின் சட்டங்களை எப்போதும் அறிந்து, அவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here