ஜாலான் மாவார் இரவு சந்தையில் சண்டையிட்டதாக நம்பப்படும் எழுவர் கைது

லஹாட் டத்து, அக்டோபர் 11 :

கடந்த சனிக்கிழமை இங்குள்ள ஜாலான் மாவார் இரவு சந்தையில் ஆண்களுக்கும் பெண்ணுக்கும் இடையே நடந்த சண்டைக்கு காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதமே காரணம் என நம்பப்படுகிறது.

இரவு 9 மணியளவில், ஹெல்மெட்களை அணிந்து கொண்டு, நாற்காலிகளால் தாக்கி சண்டையில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது என்று லஹாட் டத்து மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ரோஹன் ஷா அகமட் தெரிவித்தார்.

தகவலின் அடிப்படையில், லஹாட் டத்து மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தியதுடன், சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களையும் அடையாளம் காண Ops Cantas எனும் நடவடிக்கையை தொடங்கியது.

“இதன் விளைவாக, ஞாயிறு காலை 11.40 மணியளவில், விசாரணைக்கு உதவுவதற்காக, 19 முதல் 28 வயதுடைய ஆறு ஆண்களும் ஒரு பெண்ணும் கம்போங் உந்தா சாலையின் ஓரத்தில் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக அவர் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “சண்டையில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சாம்பல் நிற ஹெல்மெட்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

“சந்தேக நபர்களில் ஒருவருக்கு தனது காதலியுடன் கருத்து வேறுபாடு இருந்ததே இதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்களான மூன்று ஆண்கள் அந்தப் பெண்ணின் காதலனுடன் சண்டையிட்டனர்.

“அதன் காரணமாக, சம்பந்தப்பட்ட பெண்ணின் காதலன், சண்டைக்கு உதவுவதற்காக தனது சகோதரனையும் நண்பரையும் அழைத்தார்,” என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று முதல் ஒக்டோபர் 13 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

“கலவரத்திற்காக குற்றவியல் சட்டம் 148 வது பிரிவின்படி வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here