ஜோகூர் பாரு, அக்டோபர் 12 :
ஜோகூரில் உள்ள 17 துணை மாவட்டங்கள் (முக்கிம்) போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சமூக சீர்கேடுகளுக்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளாக (KBT) வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று மாநில சுகாதார மற்றும் ஒற்றுமைக் குழுத் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்தார்.
இந்த 17 துணை மாவட்டங்களும் ஜோகூர் பாரு, பொந்தியான், பத்து பஹாட், சிகாமாட், மூவார் மற்றும் மெர்சிங் ஆகிய இடங்களில் உள்ளன என்றார்.
2025 இல் போதைப்பொருளை முரராக கட்டுப்படுத்தும் இலக்குகளுக்கு இணங்க, ஐந்தாண்டு காலத்திற்குள் இந்த ஆரோக்கியமற்ற நடவடிக்கைகளைக் குறைப்பதில் மேற்கூறிய துணை மாவட்டங்களில் உள்ள 155 பகுதிகள் இலக்கு வைக்கப்பட வேண்டும் என்று தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனம் (AADK) தீர்மானித்துள்ளதாக லிங் கூறினார்.
“மாநில அரசு ஒதுக்கீட்டின் மூலம், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க மாஜூ ஜோகூர் நிகழ்ச்சி நிரல் மூலம் அதன் நோக்கத்தை அடைய நடவடிக்கை எடுக்கப்படும்.
“போதைப்பொருள் விவகாரத்தை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது, ஏனெனில் இது தனிமனிதரிலிருந்து சமூகத்தின் சீர்கேட்டிற்கு வித்திட்டுச் செல்லும் என்ற வகையில் நாங்கள் ஒன்றிணைந்து இப்பிரச்சினையை அதன் வேரிலிருந்தே அழிக்க வேண்டும்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
போதைப்பொருள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களின் கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஜோகூர் 10வது இடத்தில் இருப்பதாக லிங் கூறினார். இதில் 94 விழுக்காடு ஆண்கள் , 6 விழுக்காடு பெண்களையும் உள்ளடங்கிய 13,261 நபர்களை உள்ளடக்கியது, கடந்த ஜூன் மாதம் வரை 4,973 தனிநபர்கள் புனர்வாழ்வு சிகிச்சை பெற்றுள்ளனர்.
“வயதுப் பிரிவுகளின் அடிப்படையில், போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் 19 முதல் 39 வயதுடைய இளைஞர்கள் (65.9 விழுக்காடு) அதைத் தொடர்ந்து 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் (32.8 விழுக்காடு) என்றார்.