ஜோகூர் பாரு, அக்டோபர் 13 :
ஜோகூர் பாரு நகரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியை மேம்படுத்த அரை மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்ய மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாபீஸ் காஜி தெரிவித்தார்.
அதில் அருள்மிகு ராஜமாரியம்மன் தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் ஜோகூர் பாரு இந்து சுடுகாட்டிற்காக மாநில அரசு மேலும் RM100,000 ஒதுக்கியுள்ளதாக அவர் கூறினார். “ஜோகூர் பாரு இந்து சுடுகாட்டிற்கான முன்மொழிவை நான் பெற்றுள்ளேன், அது மேலும் ஆய்வுகள்மேற்கொள்ளப்படும் என்று நேற்று புதன்கிழமை (அக். 12) இரவு ஜாலான் உங்கு புவானில் நடைபெற்ற ஜோகூர் பாரு தீபாவளி பசாரின் தொடக்க விழாவில் தெரிவித்தார்.
அதன் “ஒரு தொடக்கமாக, தகன மேடைக்கு RM100,000 மாநில அரசு ஒதுக்கும்” என்று அவர் கூறினார்.
ஓன் ஹாபீஸ் தனது உரையில், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
“ஜோகூரை முன்னோக்கி கொண்டு வர, மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடு போதுமானதாக இல்லை.
“மந்திரி பெசார் என்ற முறையில், மாநிலத்தை மேம்படுத்த, புத்ராஜெயாவில் உள்ள மத்திய அரசின் உதவி தேவை என்பதை நான் உணர்கிறேன். “மாநில அரசு மத்திய அரசோடு ஒத்துப்போக வேண்டும்,” என்று கூறிய அவர், மார்ச் மாதம் நடந்த மாநிலத் தேர்தலின் போது ஜோகூர் காட்டிய ஸ்திரத்தன்மையைப் போல் வரவிருக்கும் பொதுத் தேர்தலும் அமையும் என தான் நம்புவதாகவும் கூறினார்.









