கோத்தா திங்கி, அக்டோபர் 18 :
இந்த மாவட்டத்தில் நான்கு முக்கிய சாலைகள் உட்பட மொத்தம் 65 இடங்கள் பருவ மழையின் போது வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவற்றில் 53 கிராமங்கள், 10 வீட்டுத் தோட்டங்கள் மற்றும் இரண்டு ஃபெல்டா பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ளதாக கோத்தா திங்கி மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு அதிகாரி டத்தின் படுகா ஹஸ்லினா ஜலீல் தெரிவித்தார்.
ஆண்டு இறுதியில் பெய்யும் வடகிழக்கு பருவமழைக்கு தயாராகும் வகையில் பல ஒருங்கிணைப்புக் கூட்டங்களை கோத்தா திங்கி மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு நடத்தியதாக அவர் கூறினார்.
மேலும் ஆறுகள் மற்றும் வடிகால்களை அவ்வப்போது சுத்தப்படுத்துதல் போன்ற வெள்ளத் தணிப்புத் திட்டங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டன என்றார்.
அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டால், 5000 பேரை தங்க வைக்க வசதியாக 64 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களை நிறுவ தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், பல்வேறு நிறுவனங்களில் இருந்து மொத்தம் 447 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.