மகனை பள்ளிக்கு அனுப்புவதற்காக சென்றபோது ஏற்பட்ட விபத்தில் தந்தை, மகன் பலி

தாசேக் கெலுக்கோர், அக்டோபர் 28 :

இன்று காலை, இங்குள்ள ஜாலான் பாடாங் மெனோராவில் தனது மகனை பள்ளிக்கு அனுப்புவதற்காக சென்றபோது, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்தது அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், 46 வயதுடைய தந்தை மற்றும் 15 வயதுடைய மகன் ஆகியோர் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக செபெராங் பிறை வடக்கு மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் ரட்ஸி அகமட் தெரிவித்தார்.

“போலீஸ் விசாரணையின் முடிவில், சம்பந்தப்பட்ட இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் பாதையில் நுழைந்து சறுக்கியதால் விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

“அதே சமயம் அந்த வழியில் நேராகச் சென்ற பல்நோக்கு வாகனம் அவர்களை உடனே தவிர்க்க முடியாததால், அது மோட்டார் சைக்கிளை மோதியது. இந்த மோதலால் கீழே விழுந்த தந்தையும் மகனும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கேப்பாலா பத்தாஸ் மருத்துவமனைக்கு (HKB) கொண்டு செல்லப்பட்டன.

மேலும், இவ்வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன்படி விசாரிக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here