வெளிநாட்டுப் பெண்ணுடன் பழகியதால் வாலிபர் தாக்கப்பட்டது தொடர்பில் 6 பேர் கைது

ஜோகூர் பாரு, நவம்பர் 3 :

வெளிநாட்டுப் பெண்ணுடன் பழகியதால் ஆண்கள் குழு ஒன்று, நேற்று ஒரு 19 வயது வாலிபரை சரமாரியாக தாக்கி, கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பில் மொத்தம் ஆறு பேரை போலீசார் நான்கு வெவ்வேறு சோதனைகளில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19 முதல் 52 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்களில் ஒரு வெளிநாட்டவரும் அடங்குவதாக தெற்கு ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ரவூப் சிலாமாட் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, அனைத்து சந்தேக நபர்களும் இரவு 9.10 முதல் 9.40 வரை மசாயிலுள்ள மூன்று பகுதிகளிலும் லார்கினின் ஒரு பகுதியிலும் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சோதனையில் 5 கைத்தொலைபேசிகள், ஒரு பை, இரண்டு தோட்டாக்களுடன் கூடிய கைத்துப்பாக்கி, 20 தோட்டாக்கள், ஆயுத பாவனை அட்டை நகல் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதிப் படிவத்தின் நகல் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம் என்றார்.

மேலும் விசாரணைக்கு உதவுவதற்காக இந்த வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் மேலும் பல சந்தேக நபர்களைக் கண்டறிய காவல்துறை இன்னும் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது என்று ரவூப் கூறினார்.

“இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 148 மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 506 இன் படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ரவூப், இங்குள்ள ஜாலான் டத்தோ அப்துல்லா தாஹிர் அருகே சாலையோரத்தில், அதிகாலை 5 மணியளவில் ஆண் குழுவினர் இடையே சண்டை நடந்ததாக கூறினார்.

20 முதல் 50 வயதுக்குட்பட்ட ஒன்பது ஆண்களால் தாக்கப்பட்டதாகக் கூறிய 19 வயதுடைய உள்ளூர் இளைஞனை, அவர்கள் கால்கள், கைகள் மற்றும் நாற்காலிகள், மேஜைகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி தாக்கினர். இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.

இதனால் “பாதிக்கப்பட்டவரின் தலை, மூக்கு, வலது புருவம், தலையின் பின்புறம், கைகள் மற்றும் முழங்கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, மூன்று நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டவருக்கு சமூக ஊடகங்கள் மூலம் பழக்கமான 20 வயதுடைய வெளிநாட்டுப் பெண்ணை சந்தித்தபோது ஏற்பட்ட முரண்பாடே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here