சேமிப்புக் கிடங்கில் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 8 மாத கர்ப்பிணி பெண் மற்றும் 2 சகோதரர்கள் கைது

புக்கிட் மெர்தாஜாம், நவம்பர் 3 :

இங்குள்ள அல்மாவில் விளையாட்டுப் பொருட்கள் சேமித்து வைக்கும் சேமிப்புக் கிடங்கு/ களஞ்சியம் உடைக்கப்பட்ட வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக, இரண்டு சகோதரர்கள் மற்றும் எட்டு மாத கர்ப்பிணியான ஒரு பெண் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அக்டோபர் 24 ஆம் தேதி, நண்பகல் 12.22 மணிக்கு சேமிப்புக் கிடங்கின் உரிமையாளரிடம் இருந்து புகாரைப் பெற்றதாக செபெராங் பிறை தெங்கா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் டான் செங் சான் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், குறித்த சேமிப்புக் கிடங்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருந்த நிலையில், அது மீண்டும் உடைக்கப்பட்டது, மேலும் இது ஒரே சந்தேக நபரால் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

“இந்த சம்பவத்தை அந்த கிடங்கின் உரிமையாளர் தனது ஸ்மார்ட்போன் வழியாக சிசிடிவி காட்சிகளை பார்த்த பின்னர், சேமிப்பு கிடங்கு இருக்கும் இடத்திற்கு சென்றார். பின்னர், அந்த கிடங்கின் அலுவலகப் பகுதி உடைக்கப்பட்டிருப்பதையும், இரண்டு மடிக்கணினிகள் காணாமல் போனதையும் அவர் கண்டுபிடித்தார், அதன் பின்னர் கிடங்கின் உரிமையாளர் காவல்துறையில் புகாரளித்ததாக அவர் கூறினார்.

“முன்னதாக, மூன்று மாதங்களுக்கு முன்பு வளாகத்திற்குள் நுழைந்த சந்தேக நபர்களால் கிடங்கில் வைத்திருந்த பணம் உட்பட அக்கிடங்கின் உரிமையாளர் RM180,000 இழந்தார்,” என்று அவர் இன்று செபெராங் பிறை தெங்கா மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், விசாரணைக்கு உதவுவதற்காக 30 வயதுடைய நபரையும் அவரது 25 வயது சகோதரனையும் இங்கு அருகில் உள்ள வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

தற்போது எட்டு மாத கர்ப்பிணியான முதல் சந்தேக நபரின் மனைவியான ஒரு பெண்ணும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

“காவல்துறையின் சோதனையின் மூலம், முதல் சந்தேக நபரிடம் வீடுகளை உடைத்தல் மற்றும் பல கட்டிடங்களை உடைத்தது தொடர்பான 11 முன்னைய குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது, அதே நேரத்தில் அவரது இளைய சகோதரருக்கு போதைப்பொருள் தொடர்பானவை உட்பட ஐந்து முன்னைய குற்றப் பதிவுகள் உள்ளன.

“முதல் சந்தேக நபரின் மனைவி உட்பட, இந்த இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம், கடந்த ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் செபெராங் பிறை தெங்காவைச் சுற்றியுள்ள கடை உடைப்பு தொடர்பான இரண்டு புகார்களை நாங்கள் வெற்றிகரமாக தீர்த்து வைத்துள்ளோம் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார். கூறினார்.

இந்தச் சோதனையில் உடைகள், வாள், மடிக்கணினி, கிராஸ் பாடி பேக், தொலைபேசிகள், ஸ்க்ரூடிரைவர், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்ததாக செங் சான் கூறினார்.

“கிடங்கு உடைக்கப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி வாங்கியதாக நம்பப்படும் கார், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், நான்கு தொலைபேசிகள், ஒரு தொலைக்காட்சி மற்றும் இரண்டு சலவை இயந்திரங்கள் உட்பட பல பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், மூன்று மோதிரங்கள், இரண்டு வளையல்கள், ஒரு ஸ்மார்ட் வாட்ச் மற்றும் 12 கொள்முதல் ரசீதுகள், தங்க அடகு ரசீதுகளையும் பறிமுதல் செய்தோம்,” என்றார்.

குற்றவியல் சட்டத்தின் 457 வது பிரிவின் படி விசாரணைக்கு உதவுவதற்காக மூன்று சந்தேக நபர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here