செராஸ், தாமான் மல்லூரியில் இன்று பலத்த மழையின் போது ஜாலான் மஹ்கோத்தாவில் மரம் ஒன்று வாகனங்கள் மீது மோதியதில் 6 பேர் லேசான காயமடைந்தனர்.
பலத்த காற்றினால் மரம் வேரோடு சாய்ந்தபோது, அப்பகுதியைக் கடந்து சென்ற மூன்று கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கைகளின் தளபதி மசூரி மாட் ஜைன் தெரிவித்தார்.
மாலை 4.07 மணிக்கு சம்பவம் குறித்து அறிக்கை கிடைத்ததோடு திணைக்களம் ஹாங் துவா மற்றும் பண்டார் துன் ரசாக் தீயணைப்பு நிலையங்களிலிருந்து 18 தீயணைப்பு வீரர்களையும் அவசர சேவை உதவிப் பிரிவையும் சம்பவ இடத்திற்கு அனுப்பியது.
இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் என 70 வயதுக்குட்பட்ட ஆறு பேர் பாதிக்கப்பட்டவர்களாவர். லேசான காயங்களுக்கு ஆளாகியிருந்தவர்கள் சிகிச்சைக்காக அம்பாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
தடைப்பட்ட பாதையை அகற்றும் பணிக்காக விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. குடிமைத் தற்காப்புப் படையும், கோலாலம்பூர் நகர மண்டபமும் இந்த நடவடிக்கைக்கு உதவுகின்றன என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.









