அனைவருக்குமான மலேசியக் குடும்பக் கோட்பாடு

எஸ். வெங்கடேஷ்

நாட்டின் பராமரிப்புப் பிரதமரான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் 2004ஆம் ஆண்டு முதல் பகாங் பெரா நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டு வெற்றி பெற்று வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி நாட்டின் 9ஆவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் இவர் மலேசியக் குடும்பக் கொள்கையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தினார்.

மலேசியக் குடும்பக் கொள்கை

கோவிட்-19 வைரஸ் தொற்றுத் தாக்கத்தால் ஏற்பட்ட சவால்களையும் சர்சைகளையும் எதிர்கொள்ள ஒன்றிணைந்து செயல்படுவதை வெளிக்காட்டுவதற்காக மலேசியக் குடும்பக் கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது.

சவால்மிக்க சுழலை எதிர்கொள்வதில் குடும்பக் கட்டமைப்பின் அவசியத்தை இந்தக் கொள்கை தெளிவாக வெளிக்காட்டுகிறது. மலேசியக் குடும்பக் கோட்பாடானது மூன்று முதன்மைக் கொள்கைகளையும் 20 நன்னெறிப் பண்புகளையும் உள்ளடக்கியுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றுத் தாக்கம், பிரச்சினைகளில் இருந்து நாட்டை மீட்சி அடையச் செய்வதில் ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கான பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமைத்துவத்தின் அரசாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கொள்கை முன்னிருத்தப்படுகிறது.

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேற்றுமையை உருவாக்குவதில்லை

நம் நாட்டில் வாழும் பல இன மக்களுக்கு இடையிலான விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, புரிந்துணர்வு ஆகிய அம்சங்கள் நம்மிடையே கலாச்சார வேறுபாடுகளை உருவாக்குவதில்லை. எனவே ஒரு பெருங்குடும்பமாக ஒன்றிணைந்து பயணிப்பதற்குத் தடை வருவதில்லை.

இதுபோன்ற குடும்பச் சுழ்நிலைகளுடன் ஒன்றிணைவது தனக்கு மகிழ்ச்சி தருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.
எனவேதான் நான் பிரதமர் பதவியை ஏற்றவுடன் எனது பெரா நாடாளுமன்றத் தொகுதியில் செயல்படுத்தப்பட்டிருந்த பெரா குடும்பக் கொள்கையை மலேசியக் குடும்பம் என விரிவாக்கம் செய்தேன் என்றார் அவர்.

மத -இனத்துவேஷ சர்ச்சைகள் குறைந்துள்ளன

நாட்டில் மலேசியக் குடும்பக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டிற்கும் மேலாகி விட்ட நிலையில் மத – இனத்துவேஷ சர்ச்சைகள் குறைந்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.

இந்த நேர்மறையான மேம்பாட்டின் வாயிலாக அரசாங்கம் கோவிட்-19 தொற்றுக் தாக்கத்திற்குப் பிறகு நாட்டின் பொருளாதார மீட்சியிலும் மேம்பாட்டிலும் அதிகக் கவனம் செலுத்த முடிகின்றது. இது தவிர மலேசியா வாழ் மக்களும் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவதிலும் அதிகக் கவனம் செலுத்த முடிகின்றது.

அரசாங்கத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் இந்த மலேசியக் குடும்பக் கொள்கை முக்கியப் பங்காற்றுகிறது என அண்மையில் நடைபெற்ற மலேசியக் குடும்ப விருந்தோம்பல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் நிலைத்தன்மைக்காக நான் எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தைச் சந்தித்து அரசியல் புரிந்துணரவு உடன்பாடு செய்து கொண்டேன். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் முன்புபோல் சர்ச்சைகள் ஏற்படவில்லை.

அரசாங்கம் – எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே உள்ள சூழலும் மேன்மைபெற்றது. இதன்மூலம் சில சட்டதிருத்தங்களும் சட்ட அமலாக்கங்களும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன என்றார் அவர்.

நான் அரசாங்கத்தை வழி நடத்தத் தொடங்கியபோது அந்தச் சமயத்தில் பெரும் சவாலாக இருந்த கோவிட்-19 வைரஸ் தொற்று விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே முனைப்புக் காட்டினேன்.

சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகு கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தது. அதன் பிறகு பொருளாதாரத் துறைகளும் எல்லைகளும் திறக்கப்பட்டன என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பொருளாதாரத்தை மேம்படுத்த நாட்டின் சுபிட்சம் பேருதவி

பொருளாதாரத்தை மீட்சி அடையச் செய்து மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பல இன மக்களிடையிலான ஒற்றுமையும் சுபிட்சமும் பேருதவியாக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அண்மையில் கருத்துரைத்துள்ளார்.

எனவே மலேசியக் குடும்பக் கொள்கையின் வாயிலாக ஒரு பெரும் குடும்பமாக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் சுபிட்சத்தைத் தொடர வேண்டும்.
இருக்கின்ற சுபிட்சத்தின் வழி நாம் உள்நாட்டு உற்பத்தி விகிதம் உயர்வதை உணர முடிகின்றது. குறிப்பாக இரண்டாம் காலாண்டில் 8.9 விழுக்காடு வரையில் உள்நாட்டு உற்பத்தி விகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தெற்கிழக்காசியாவில் இது சிறந்த விகிதமாகக் கருதப்படுகிறது.

அதே சமயம் நாட்டின் பண வீக்க விகிதமும் 4.5 விழுக்காட்டிற்குக் குறைந்துள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த விகிதமானது நல்ல நிலையை வெளிக்காட்டுகிறது என்று அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

2023 வரவு செலவு பட்ஜெட் மலேசியக் குடும்பத்திற்கானது

நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் கணக்கில் கொண்டு அரசாங்கம் 2023 வரவு செலவுத் திட்டத்தை உருவாக்கியுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

அத்தரப்பு மக்களின் தேவைகளை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு பிரத்தியேக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் எம்40 பிரிவு மக்களின் கருத்துகளும் ஆலோங்னைகளும்கூட பரிசீலனை செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக எம்40 பிரிவினருக்கு வரவு செலவுத் திட்டத்தில் பிரத்தியேகத் திட்டங்கள் இருந்ததில்லை என நாங்கள் அறிந்தோம். இம்முறை அவர்களுக்குமான திட்டங்களும் பட்ஜெட்டில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் அவர்களுக்காக நலத் திட்டங்களையும் வரையறுத்துள்ளதாக நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது மலேசியக் குடும்பத்திற்கான வரவு செலவுத் திட்டமாகும். இதில் மாற்றுத் திறனாளிகள், மகளிர் , இளைஞர்கள், வர்த்தகப் பிரிவினர் என அனைத்துத் தரப்பினருக்குமான நலத் திட்டங்கள் உள்ளன.

அதே சமயம் அடுத்தாண்டு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள அனைத்துலகப் பொருளாதாரச் சரிவையும் கணக்கில் கொண்டு இந்த வரவு செலவுத் திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.

தீபகற்ப மலேசியா மட்டுமன்றி சபா, சரவாக் மாநிலங்களுக்கும் தேவையான திட்டங்களை ஏற்படுத்தித் தர இந்த வரவு செலவுத் திட்டத்தின் வழி அரசாங்கம் முனைப்புக் காட்டுகிறது எனவும் அவர் விவரித்தார்.

2023 பட்ஜெட்டை செயல்படுத்த தேசிய முன்னணியைத் தேர்வு செய்யுங்கள்

அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2023 வரவு செலவுத் திட்டத்தில் உள்ள இணைத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு தயார் நிலையில் உள்ளது. அந்த வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள திட்டங்களை வெற்றி அடையச் செய்ய வாக்காளர்கள் வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் நெகிரி செம்பிலானில் நடைபெற்ற மலேசியக் குடும்ப அபிலாஷை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் இத்தகவலைக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here