மலேசியக் குடும்பத்தின் கீழ் அனைவரும் அரவணைக்கப்படுகின்றனர்

நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலை முன்னிட்டு, நேற்று நாடு தழுவிய அளவில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. இதில் பராமரிப்புப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பெரா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

இவர் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் பெரா நாடாளுமன்றத் தொகுதியில் உறுப்பினராகச் செயலாற்றி வந்துள்ளார். கடந்த ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு டத்தோஸ்ரீ இஸ்மாயில் மலேசியா குடும்பம் கோட்பாட்டினை அறிமுகம் செய்து வைத்தார். இந்தக் கோட்பாட்டை முன்னதாக அவர் தமது நாடாளுமன்றத் தொகுதியில் பெரா குடும்பம் என்ற பெயரில் செயல்படுத்தி வந்திருந்தார்.

மலேசியர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து எதிர்வரும் சவால்கள் – இன்ப- துன்பங்களை எதிர்கொள்ள இந்தக் கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது.
நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பினரும் பின்தங்கிவிடக்கூடாது. அரசாங்கம் அதனை உறுதி செய்ய தொடர் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று பிரதமர் தொடர்ந்து கூறி வருவதுடன் அதனைச் செயல்படுத்தியும் உள்ளார்.

அவ்வகையில் நாட்டில் வாழும் இந்தியர்கள் எந்த நிலையிலும் பின்தங்கிவிடமாட்டார்கள். பொருளாதாராம் – கல்வி என அனைத்து அம்சங்களிலும் இந்தியர்களின் நலன் காக்கப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.

இதனை வெளிக்காட்டும் வகையில் கடந்த மாதத் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட 2023 வரவு – செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்கென பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

குறிப்பாக, மித்ரா எனும் மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவின் வாயிலாக இந்தியத் தொழில்முனைவோருக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் ஸ்பூமி திட்டத்தின் வாயிலாக இந்திய சமூக தொழில் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் 2 கோடியே 50 லட்சம் ரிங்கிட் நிதி வழங்கியுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு திட்டங்களை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்.

அது மட்டுமல்லாது கோவிட்-19 பெருதொற்றுப் பரவல் தாக்கத்திற்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் முழுவதுமாய் மீட்சி அடையச் செய்ய அவர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.

குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் நாட்டின் எல்லைக் கதவுகள் திறக்கப்பட்டது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

இந்நிலையில் மலேசியக் குடும்ப அபிலாஷை நிகழ்ச்சிகளையும் பிரதமர் நாடு தழுவிய அளவில் ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றார்.

மாநிலம் மாநிலமாக நடத்தப்பட்ட இந்த அபிலாஷை விழாவில் மக்களுக்குத் தேவையான வேலை வாய்ப்புகள், சீகாதாரக் காப்புறுதிகள், தொழில்நுட்ப மேம்பாடுகள், செயலாக்க தகவல்கள் என பல தரப்பட்ட அம்சங்கள் குறித்து விளக்கமும் செயல்பாடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த முன்னெடுப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கு மட்டுமல்லாது மலேசியக் குடும்பத்தைச் சேர்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்மைகளை ஏற்படுத்தித் தந்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த அபிலாஷை பெருவிழா நடத்தப்படும்போது முன் வைக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் அதிகமானோர் அங்கு வந்துள்ளனர்.

பல இன மலேசியர்கள் இந்த பெருவிழாவிற்கு வந்து நன்மை அடைந்தது தமக்கு பெருமகிழ்ச்சிஅளிப்பதாக பிரதமர் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையே, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் தமது பெரா தொகுதியிலுள்ள இந்திய மக்களைச் சந்தித்தார். அப்போது அவர்களுக்குத் தீபாவளி அன்பளிப்புகளும் பரிசு கூடைகளும் வழங்கப்பட்டன. அதோடு, அங்கு இந்திய மகளிருடன் இணைந்து தோசை போன்ற இந்திய பாரம்பரிய உணவைச் சமைத்துப் பார்த்தும் பிரதமர் மகிழ்ந்தார்.

இப்படி பிரதமர் மலேசியா வாழ் அனைத்துத் தரப்பு மக்களின் மீதும் அக்கறை கொண்டு அவர்கள் சார்ந்த நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கெடுத்து வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here