நாட்டின் பொருளாதார வளர்ச்சி : இஸ்மாயில் பெருமிதம்

கோவிட்-19க்குப் பிந்தைய பொருளாதார மீட்பு முயற்சிகளில் அரசாங்கத்தின் செயல் திட்டங்கள் சரியான பாதையில் உள்ளன என்று தற்காலிகப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 8.9 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 14.2 சதவிகிதம் உயர்ந்துள்ளதன் மூலம், நாடு வலுவான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்று கூறினார்.  வியட்நாமின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியான 13.7 சதவீதத்தை விஞ்சி, 14.2 சதவீதம் வளர்ச்சி  என்பது சிறப்பான ஒன்றாகும்.

எல்லைகளை மீண்டும் திறப்பது மற்றும் சிறந்த  பொருளாதார நடவடிக்கைகள் போன்ற அரசாங்கத்தின் கொள்கைகள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதையே  இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது  என்றார். தொற்றுநோய்க்கு பிந்தைய முயற்சிகளை அரசாங்கம் வெற்றிகரமாக வழிநடத்தியது. இது தனியார் நுகர்வு மற்றும் தொழிலாளர் சந்தையை ஊக்குவித்தது.

கம்போங் பாங்காக் ஒராங் அஸ்லி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ”பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் தவறிவிட்டது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது,” என்று  கூறினார்.

வேலையின்மை  பிரச்சனையும் படிப்படியாக குறைந்து செப்டம்பரில் 3.6 விழுக்காடு  என பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில்  4.6 விழுக்காடுகளாக இருந்தது.    செப்டம்பரில் உற்பத்தித் துறைக்கான வர்த்தக மதிப்பு RM161.7 பில்லியனுடன் வணிகத் துறையும் வலுவடைந்து வருகிறது, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 19.5 சதவீதம் உயர்ந்துள்ளது  என்று அவர் கூறினார்.

உலகம்  பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்ட போதிலும் நாடு  பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய  அரசாங்கம் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்றார்.  இந்த வேகம் தொடரும் என்றும், நாடு  பெரிய அளவில் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவும்  நாங்கள் இதை தொடர்ந்து கண்காணிப்போம் என்று உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here