பெரா மலேசியக் குடும்பப் பெருவிழாவில் 2,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் – பிரதமர் தகவல்

* மலேசியக் குடும்ப அரசாங்கம் மக்கள் நலனில் என்றும் அக்கறை கொள்கிறது
* மக்களின் வாழ்வாதாரப் பயணம் தடைபடாமல் இருக்க பல திட்டங்கள் அமல்

எஸ்.வெங்கடேஷ், பெரா, நவ.14-

பெராவில் நேற்று நடத்தப்பட்ட ‘Anak Muda Gegor Bera’ மலேசியக் குடும்பப் பெருவிழாவில் 15 முதலாளிகளை உட்படுத்தி 2,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக பராமரிப்புப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

நேற்றுக் காலை 9 மணி முதல் நடத்தப்பட்ட இந்தப் பெருவிழாவில் இலவச மருத்துவப் பரிசோதனை, சொக்சோ காப்புறுதி விளக்கம், ஜாமீன் கெர்ஜா திட்டம் வாயிலாக வேலை வாய்ப்புகள், எச்ஆர்டி கார்ப் திட்ட விளக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த பெருவிழாவில் சிறப்புப் பிரமுகராக பராமரிப்புப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கலந்து கொண்டார்.

அவருடன் சொக்சோ அமைப்பின் தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான் கமால், சொக்சோ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ முகமட் அஸ்மான், எச்ஆர்டி கார்ப் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஷாகுல் டாவுட் உள்ளிட்ட பலரும் இந்தப் பெருவிழாவிற்கு வந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் மலேசியக் குடும்பத்திற்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அச்சமயத்தில் பலரும் வேலை இழந்தனர். இந்தச் சூழலில் கிக் போன்ற புதிய பொருளாதாரத் துறைகளில் ஈடுபடுபவர்கள் உட்பட தொழிலாளர்கள் – முதலாளிகளின் நலன் காக்க மனித வள அமைச்சின் மூலம் அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தற்போது மலேசியக் குடும்பத்தின் மாற்று வகை வருமானமாக கிக் பொருளாதாரம் அமைகின்றது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு சில ‘கிக் ரைடர்’ சின் நலன் மட்டுமே காக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்தப் பிரிவினருள் 260,000க்கும் மேற்பட்டோரின் நலன் சொக்சோவின் சுய தொழில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படுகின்றது. குறிப்பாக 12ஆவது மலேசியத் திட்டத்திலும் இந்தப் பிரிவினரின் நலன் குறித்து அக்கறை கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

மேலும் பணியிடங்களில் வேலை நிறுத்தம் செய்யப்பட்டு வருமானம் இழந்தவர்களின் நலன் காக்கவும் வருமான – திறன் மறுகட்டமைப்புத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. சொக்சோ அமைப்பின் வழி செயல்ப்படுத்தப்பட்ட வேலை காப்புறுதி திட்டத்தின் கீழ் 188,526 மலேசியக் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. அவர்களின் வாழ்வாதாரம் வழக்கம் போல் இயங்க இந்தத் திட்டத்தின் வழி 1 பில்லியன் ரிங்கிட் நிதி விநியோகிக்கப்பட்டுள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
தொடந்து ‘Penjana Hrd Corp’ திட்டத்தின் மூலம் பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்த 100,000 பேருக்கு மறு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ‘MyFutureJobs’, MYHRDCORP’ போன்ற பல்வேறு நவீனத் தளங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு பல வகைகளில் மக்களுக்கு ஆதரவு அளிக்கப்படுகின்றது எனவும் பிரதமர் விவரித்தார்.
இப்படி மக்கள் – நாட்டின் நலன் காக்க மலேசியக் குடும்ப அரசாங்கம் தொடர்ந்து பல முன்னெடுப்புகளைச் செயல்படுத்தி வருகின்றது. அவ்வகையில் பெரா நாடாளுமன்றத் தொகுதியில் நடத்தப்படும் இந்தப் பெருவிழாவில் இடம்பெற்றுள்ள அம்சங்களும் அப்பகுதி வாழ் மக்களுக்குப் பேராதரவாய் இருக்கும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, நடைபெற்ற இந்தப் பெருவிழாவில் சொக்சோ – எச்ஆர்டி கார்ப் திட்டங்களின் வழி பயிற்சி பெற்று வேலை உறுதி செய்த பெரா பகுதியில் வசிக்கும் 12 பேருக்கு நற்சான்றிதழும் வழங்கப்பட்டன. பிரதமர் முன்னிலையில் டத்தோஸ்ரீ சுபஹான் கமால் சான்றிதழ்களை எடுத்து வழங்கினார்.

இது தவிர இந்த மலேசியக் குடும்பப் பெருவிழாவில் மொபைல் லெஜெண்ட்’ எனப்படும் மின்னியல் விளையாட்டுப் போட்டியும் இடம்பெற்றிருந்தன. போட்டியில் பங்கு பெற்ற விளையாட்டாளர்களை பிரதமர் சந்தித்து ஊக்க வார்த்தை வழங்கினார்.
இந்நிலையில் முதல் முதலாக சுல்தான் அஸ்லான் ஷா கிண்ணத்தை வென்ற தேசிய ஹாக்கி அணியினரின் பயிற்றுநர் தமது ஆட்டக்காரர்களுடன் இந்தப் பெருவிழாவிற்கு வந்து மரியாதை நிமித்தமாக பிரதமரிடம் வெற்றிக் கிண்ணத்தை வழங்கினர். பிரதமரும் அந்தக் கிண்ணத்தைத் தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஹாக்கி அணியினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

சுற்று வட்டார மக்கள், சமூக ஆர்வலர்கள் என 1,000க்கும் மேற்பட்டவர்கள் இந்த மலேசியக் குடும்பப் பெருவிழாவில் கலந்து கொண்டனர். அம்னோ உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் பெரா நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here