கோலக்கெடாவில் பிரதமரின் விளம்பர பதாதைகளை எரித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

அலோர் ஸ்டார், நவம்பர் 16 :

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் கோலக்கெடா நாடாளுமன்றத்திற்கான தேசிய முன்னணி (BN ) வேட்பாளர் டத்தோ டாக்டர் மஷிதா இப்ராஹிம் ஆகியோரின் பிரச்சார விளம்பர பதாதைகளை நேற்று எரிக்க முயன்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் என்று கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அஹ்மட் ஷுக்ரி மாட் அகிர் கூறினார்.

கம்போங் கேலோங் ஆயிர், முக்கிம் குனுங்கிலுள்ள விளம்பர பதாதைகள் சேதப்படுத்தப்பட்டதைக் கவனித்த தேசிய முன்னணியின் அதிகாரிகள், நேற்று பிற்பகல் 3 மணியளவில் காவல்துறைக்கு புகாரளித்தனர் என்றார்.

“அதைத் தொடர்ந்து, தேர்தல் குற்றச் சட்டம் 1954 பிரிவு 4A(1), பதாதைகள், சுவரொட்டிகளை எரித்த குற்றத்துக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 435ன் படி போலீசார் விசாரிப்பதாகவும் அவற்றை எரித்த நபர்களை அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருகிறதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், கோலக்கெடா அம்னோ பிரிவு துணைத் தலைவர், டத்தோ அப்துல் முத்தாலிப் ஹாருன் கூறுகையில், இவ்வாறான துரோகச் செயலுக்கு தனது தரப்பு வருத்தம் தெரிவிப்பதுடன் அனைத்து கட்சி ஆதரவாளர்களும் விவேகத்துடன் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் பிரச்சாரத்தின் போது பதற்றத்தை ஏற்படுத்தும் இவ்வாறான நாச வேலைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here