கோலாலம்பூர், நவம்பர் 16 :
“வெளிநாட்டினர் கொண்ட ஒரு குழு கோலாலம்பூருக்கு சட்டவிரோதமாக பேருந்தில் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், இங்குள்ள ஜாலான் டூத்தா குடிநுழைவுத் துறையினர் குறித்த பேருந்தில் மேற்கொண்ட சோதனையில், ஆவணமற்ற வெளிநாட்டினர் 14 பேரை கைது செய்ததாக குடிநுழைவுத் துறை இயக்குநர் ஜெனரல், டத்தோஸ்ரீ கைருல் டிசைமி டாட் தெரிவித்தார்.
“இன்று புதன்கிழமை (நவம்பர் 16) காலை 10 மணியளவில், குடிநுழைவு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழு குறித்த பேருந்தை சோதனை செய்து, ஒன்பது ஆண்கள் மற்றும் நான்கு பெண்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவர்களும் இந்தோனேசியர்கள்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
“குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் கண்டறிவதைத் தவிர்ப்பதற்காகவும், சட்டப்பூர்வமாக நாட்டிற்குள் நுழைந்தது போலக் காட்டவும் அவர்கள் போலி முத்திரைகளைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
“தடுக்கப்பட்டவர்களில் எட்டு பேர் முந்தைய குற்றங்கள் காரணமாக மலேசியாவிற்குள் நுழைய முடியாது என தடுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள்,” என்றும் அவர் கூறினார்.
ஒவ்வொரு சந்தேக நபரும் மலேசியாவுக்குள் நுழைவதற்காக முகவர் ஒருவருக்கு RM5,000 முதல் RM6,000 வரை செலுத்தியதை ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.