ஈப்போ:
பேராக் மாநில உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்வாதாரச் செலவுகள் அமைச்சின் கிளை, தைப்பிங், சிம்பாங் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் சட்டவிரோதமாக டீசல் சேமிப்பு செய்யப்பட்டதை நேற்று “ஓப் திரிஸ் 2025” (Op Tiris 2025) சோதனையில் கண்டறிந்தது.
நேற்று மதியம் 1.20 மணிக்கு நடத்தப்பட்ட சோதனையில், மொத்தக் கொள்கலன்கள் (IBC) மற்றும் ஸ்கிட் tankகளில் மொத்தம் 36,000 லிட்டர் டீசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று, உள்நாட்டு வணிகத் துறையின் மாநில இயக்குநர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.
இவற்றை சேமித்து வைத்திருந்த லோரி ஓட்டுநரான 30 வயதான உள்ளூர் நபர் ஒருவர், கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை சேமிக்க அனுமதி கடிதம், உரிமம் அல்லது அனுமதிப்பத்திரம் ஆகியவற்றில் எதையும் குறித்த சோதனை குழுவிற்கு வழங்க முடியவில்லை.
இதையடுத்து, அவர்வசமிருந் 36,000 லிட்டர் சந்தேகத்திற்கிடமான டீசல், இரண்டு லோரிகள், ஒரு ஸ்கிட் tank, 22 IBC tankகள் மற்றும் பம்புகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் RM292,840 ஆகும்.
இந்த வழக்கு 1961ஆம் ஆண்டின் பொருட்கள் வழங்கல் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.




















