கார் லோரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியதில், பெண் ஒருவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்

மலாக்கா, நவம்பர் 29 :

இங்குள்ள கண்டாங் அருகே உள்ள அலோர் காஜா-மலாக்கா -ஜாசின் நெடுஞ்சாலையில் (AMJ) கார் லோரி மீது பயங்கரமாக மோதியதில், பெண் ஒருவர் அதிஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

பெண்ணின் கணவரின் கூற்றுப்படி, நேற்று திங்கள்கிழமை (நவம்பர் 28) வணிக நேரம் முடிந்து, தனது மனைவி ஜாசினில் இருந்து நகர மையத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது என்றார்.

மைசதுல் மட் சைட், 49, என்கிற அவரது மனைவி ஒரு சிற்றுண்டி (kuih) விற்பனையாளர் என்றும், இந்த பெரிய விபத்தின் பின்னர் அவர் நலமாக இருப்பதாகவும், சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனையில் இருப்பதாகவும், அவரது கணவர் ஜகாரியா இப்ராஹிம் குறித்த விபத்து தொடர்பில் தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 28) மாலை 5.30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்தார்.

இந்த விபத்தில் சிக்கிய பகாங்கின் ஃபெல்டா கெமோமோய் ட்ரையாங்கைச் சேர்ந்த மைசதுல் என்ற பெண்மணி சிறு காயங்களுக்கு ஆளானதாக அவர் கூறினார்.

ACP கிறிஸ்டோபர் பாடிட் கூறுகையில், (AMJ) போக்குவரத்து விளக்கு சந்திப்பில் “யு-டர்ன்” செய்து கொண்டிருந்த லோரியின் பின்புறத்தில் கார் மோதியதில் இந்த விபத்து நடந்தது என்றார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கை மற்றும் கால்களில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 43(1)ன் கீழ் விபத்து குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here