பத்தாங்காலி நிலச்சரிவில் இன்னும் 25 பேர் புதையுண்டுள்ளனர் – தேடல் தொடர்கிறது

இன்று நண்பகல் 12 மணி வரையான நிலவரப்படி, கெந்திங் மலை நிலச்சரிவில் இன்னும் 25 பேர் புதையுண்டிருப்பதாக, உலு சிலாங்கூர் போலீஸ் தலைவர் சுஃபியன் அப்துல்லா தெரிவித்தார்.

அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் 15 நிறுவனங்களைச் சேர்ந்த 394 பேர் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலச்சரிவு, கெந்திங் மலைக்கு அருகில் இருக்கும் ரிவர் ஹில்டாப்ம் ஃபார்ம்வியூ மற்றும் ரிவர்சைட் உட்பட சில முகாம்கள் அமைந்துள்ள தளங்களில் அதிகாலை 2.24 மணிக்கு நிகழ்ந்தது. அந்த முகாம்களில் கடந்த புதன்கிழமை முதல் சுமார் 79 பேர் தங்கி இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்த விபத்து நிகழ்ந்த உனேயே, அதாவது அதிகாலை 2.24 மணிக்கு தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரத்திற்குள் அங்கு சென்று சேர்ந்ததாகவும், சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தலைவர் நோராசாம் காமிஸ் தெரிவித்தார்.

தற்போது மீட்பு நடவடிக்கையில் கோல குபு பாரு, ரவாங், கெந்திங் ஹைலண்ட்ஸ், செந்தோசா, அம்பாங், பாண்டான், கோத்தா அங்கெரிக், காஜாங் மற்றும் அண்டாலாஸ் ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here