சிலாங்கூரில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு கட்டடங்களுக்கு தீயணைப்பு சான்றிதழ் இல்லை – வெளியான அதிர்ச்சி தகவல்

சிலாங்கூரில் மொத்தம் 789 வளாகங்கள் அல்லது 47 சதவீதமான கட்டடங்கள் தீயணைப்பு சான்றிதழ் (FC) இல்லாமல் இயங்குவது கண்டறியப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் டத்தோ நோராஸாம் காமிஸ் தெரிவித்தார்.

அவற்றில் 394 தொழிற்சாலைகள், 129 அலுவலக கட்டடங்கள், 117 சேமிப்புக் கிடங்குகள் மற்றும் 67 பல்பொருள் அங்காடிகள், மளிகை கடைகள் மற்றும் ஷாப்பிங் சென்டர்கள் போன்ற வணிக வளாகங்கள்
அடங்குவதாக அவர் கூறினார்.

இவை தவிர, 37 விடுதிகள், 22 மாணவர் தங்கும் விடுதிகள், 17 மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள், பல்நோக்கு அரங்குகள் மற்றும் கிளப்ஹவுஸ்கள் போன்ற 5 பொது பயன்பாட்டு இடங்கள் மற்றும் ஒரு நூலகம் ஆகியவை தீயணைப்பு சான்றிதழ்களைக் கொண்டிருக்கவில்லை என கண்டறியப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

தீயணைப்பு சேவை சட்டம் 1988 (சட்டம் 341) இன் படி, வளாகத்தின் உரிமையாளர்கள் தீயணைப்புத் துரையின் அங்கிகார சான்றிதழ்களை அதாவது தீயணைப்பு சான்றிதழ்களை பெற வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும் என்று நோராஸாம் கூறினார்.

“கட்டட உரிமையாளர்கள் தங்கள் வளாகத்தில் உள்ள தீயணைப்பு பாதுகாப்பு அமைப்பு சரியாகச் செயல்படுவதையும், தீயைக் கண்டறியும் எச்சரிக்கைகளை வழங்கவும், சில சமயங்களில் தானாகவே தீயை அணைக்கவும் முடியும் என்பதை உறுதிப்படுத்த இந்தச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

எனவே, இன்னும் தீயணைப்புத்துறையின் அங்கிகாரத்தை வைத்திருக்காத வளாகத்தின் உரிமையாளர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதைத் தவிர்க்க, உடனடியாக அவர்கள் அதனை பெற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

தீயணைப்புச் சான்றிதழ் வைத்திருக்காத உரிமையாளருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டால் RM50,000க்கு மேல் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here