கட்சியின் விதிகள் சிலவற்றை திருத்துவதற்காக அம்னோ சிறப்பு பொதுப் பேரவை அடுத்த மாதம் கூடுகிறது என்கிறார் அஹ்மாட் மஸ்லான்

கட்சியின் சட்டதிட்டங்களில் உள்ள இரண்டு விதிகளில் திருத்தம் செய்ய சிறப்பு அம்னோ பொதுப் பேரவை அடுத்த மாதம் ஜனவரியில் நடத்தப்படும் என்று அம்னோ பொதுச் செயலாளர், டத்தோஸ்ரீ அஹமாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறப்பு பொதுப் பேரவைக்கான முன்னறிவிப்புக் கடிதங்கள் கட்சியின் தொகுதித் தலைவர்கள், தொகுதிச் செயலாளர்கள், மகளீர், இளைஞர் மற்றும் புத்ரி பிரிவுகளின் செயலாளர்களுக்கும், கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி குறிப்பிடப்பட்ட ஒரு கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

“எதிர்வரும் ஜனவரி 13-ஆம் தேதி, கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவரின் கொள்கை உரைக்குப் பின்னர், சிறப்பு அம்னோ பொதுப் பேரவை நடைபெறும்” என்று, ஜோகூர், பொந்தியானில் உள்ள தாமான் ஶ்ரீ அப்பி அப்பி பகுதி மக்களுடன் நேற்றுமுன்தினம் நடந்த ஒரு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஒரு பொதுத் தேர்தலில் ஏதாவதொரு கட்சி சார்பில் வேட்பாளராக நின்று போட்டியிடும் அல்லது சுயேட்சையாகப் போட்டியிடும் அல்லது கட்சியை விட்டு வெளியேறும் எந்தவொரு அம்னோ உறுப்பினரின் உறுப்புரிமை தானாகவே ரத்தாகிவிடும் என்று கூறப்படும் 20.11வது ஷரத்தில் இந்தத் திருத்தம் உள்ளதாக அஹ்மாட் மஸ்லான் கூறினார்.

இது கட்சித் தாவல் தடுப்பு மீதான மத்திய அரசாங்கத்தின் சட்டதிட்ட திருத்தத்திற்கு ஏற்ப கட்சியின் சட்டதிட்டங்கள் இருப்பதை உறுதிச் செய்யவே இந்த திருத்தம் செய்யப்பட விருப்பதாக அவர் கூறினார்.

மற்றொன்று சட்டப்பிரிவு 8.4ன் படி, கட்சியின் அனைத்து தகவல் பிரிவுத் தலைவர்களும், ஒவ்வோர் ஆண்டும், அம்னோ பொதுப் பேரவைக்கு இயல்பாகவே தகுதிப்பெற அனுமதியளிப்பதற்காக அதில் திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

2022-ஆம் ஆண்டுகான அம்னோ பொதுப் பேரவை முன்னர் இம்மாதம் 21 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது, நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக இது 2023-ஆம் ஆண்டு ஜனவரி 11 முதல் 14-ஆம் தேதி வரையில் நடைபெறஉள்ளதாகவும் அஹ்மாட் மஸ்லான் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here