கோலாலம்பூர்:
இந்த வருடத்தின் 51வது தொற்றுநோயியல் வாரமான (EW51/22) டிசம்பர் 18 முதல் 24 வரையிலான காலப்பகுதியில் 2,108 டிங்கிக் காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது முந்தைய வாரத்தில் 1,950 ஆக இருந்தது என்று சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
மேலும் கடந்தவாரம் டிங்கிக் காய்ச்சலால் ஒருவர் மரணமடைந்ததாகவும் அவர் இனிய வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 25,794 டிங்கிக் காய்ச்சல் சம்பவங்களுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு இதுவரை 64,078 பேர் டிங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது 148.4 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், டிங்கிக் காய்ச்சலால் மொத்தம் 50 இறப்புகள் பதிவாகியுள்ளன, கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 19 இறப்புகளே பதிவாகிஇருந்தன என்றும் அவர் கூறினார்.
“இந்த வாரம் டிங்கிக் காய்ச்சல் அதிகமாக பரவிய சுமார் 58 பகுதிகள் இனங்காணப்பட்டதாகவும், அவற்றில் 32 சிலாங்கூரிலும் , சபா (16), கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா (6) மற்றும் பினாங்கு (4) ஆகிய இடங்களும் அடங்குவதாக,” அவர் கூறினார்.