மலேசியாவின் நிஜ அம்சங்களை அனுபவங்களாக வழங்கும் தங்குமிடங்கள்

மலேசிய சுற்றுலாத்துறையில் மிக முக்கிய அம்சங்களுள் கருதப்படுவது அதன் சிறந்த தங்குமிட வசதிகள்தாம். குறிப்பாக உட்புறப் பகுதிகளில் Homestay எனப்படும் இந்தத் தங்குமிட வசதிகளின் மூலம் உள்ளூர் கலாச்சாரங்களையும் கற்றுக்கொள்ள முடிகிறது என்றால் அது மிகையாகாது.

BANGHURIS Homestay

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து 20 நிமிடங்கள் பயண தூரத்தில் அமைந்திருக்கும் இந்தத் தங்குமிடம் 2015, 2018ஆம் ஆண்டுகளில் ஆசியான் ரீதியிலான விருதுகளை வென்றுள்ளது. கோலசிலாங்கூர், சிப்பாங்கில் உள்ள கம்போங் புக்கிட் பக்கோங், கம்போங் உலு சூச்சோ, கம்போங் உலு செரிஸ் ஆகிய மூன்று கிராமங்களின் பெயர்களைப் பிரதிநிதிக்கும் வகையில் இந்தத் தங்குமிடத்தின் பெயர் அமைந்துள்ளது.

இங்கு நாசி அம்பெங் எனப்படும் பிரத்தியேக உணவு மிகவும் பிரபலம்.

Homestay Kampung Lonek

நெகிரி செம்பிலான், ஜெம்புலில் அமைந்துள்ள இந்தத் தங்குமிடத்தைச் சுற்றி வயல்கள் உள்ளன. இங்கு வரும் சுற்றுப்பயணிகள் இந்த உட்புறப் பகுதியில் வாழும் மக்களைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக பாரம்பரிய முறையில் மீன் பிடி நடவடிக்கையையும் அவர்கள் அறிந்துகொள்ள முடிகிறது. இங்கு நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற உணவான மாசாக் லெமாக் சிலி ஆப்பி உணவு பிரபலம். அதே சமயம் இந்த கம்போங் லோனேக்கைச் சுற்றி பல சுவாரஸ்யமா இடங்கள் உள்ளன. ஜெம்புல் மாவட்டத்தில் மிகவும் பழைமையான பள்ளிவாசல், இலக்கியவாதி ஸாபாவின் அருங்காட்சியகமும் இங்கு இருக்கின்றன.

Misompuru Homestay Kudat

விருது பெற்ற இந்தத் தங்குமிடத்தில் சுற்றுப்பயணிகளுக்காக 200 திட்ட அம்சங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? இங்கு ருங்குஸ் பூர்வக்குடி மக்களின் பாரம்பரிய நடனப் படைப்பு, ஆற்றுப் பயணம், பறவைகளைக் காணுதல், மீன் – நண்டு பிடித்தல் உள்ளிட்ட பாரம்பரிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

சபாவில் வடக்குப் பகுதியில் உள்ள கூடாட் ஆழ்கடல் நீச்சல், கடல் வகை உணவுகளுக்கு மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்தத் தங்குமிடத்திற்கு வரும் சுற்றுப்பயணிகள் தவறாது போர்னியோவின் சூரிய அஸ்தமனத்தைக் காண்பர்.

Farmstay Relau

இந்தத் தோட்டத் தங்குமிடத்திற்கு வந்தவர்கள் இங்கு மனநிம்மதியைப் பெறலாம் என்ற கூற்றினை ஏற்றுக் கொள்வார்கள். பாரம்பரிய மலாய் வாழ்வாதார அம்சங்களை உள்ளடக்கி மலாய்க் கலாச்சார முறையில் எழுப்பப்பட்ட வீடுகள் இங்கு தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இங்கு சுற்றுப்பயணிகளை குளிர்ச்சியான சூழல் கவரும் என்பதில் ஐயமில்லை. சுற்றுப்பயணிகள் தங்களுக்கான வீடுகளிலிருந்தும் பால்கனியிலிருந்து தேநீர் அருந்துவதே தனித்தன்மை வாய்ந்த அனுபவமாகக் கருதப்படுகிறது.

கூலிம் நகரில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இந்தத் தங்குமிடம் பழத்தோட்டங்களுக்கு நடுவே அமைந்துள்ளது. இங்கு பாரம்பரிய முறையில் பழமரங்களைப் பராமரிக்கும் முறைகளையும் அவர்கள் அறிந்து கொள்ளலாம்.

Homestay Teluk Ketapang

கோலத் திரெங்கானுவில் அமைந்துள்ள இந்தத் தங்குமிடம் பலதரப்பட்ட அம்சங்களில் வசதி நிறைந்ததாகும். சுல்தான் மாமுட் விமான நிலையத்தில் இருந்து 5 நிமிட பயண நேரத்தில் இந்த தங்குமிடத்தை அடைந்து விடலாம். மேலும் நகரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த தங்குமிடம் அமைந்துள்ளது. 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மலேசிய சுற்றுலாத்துறை விருது நிகழ்ச்சியில் இந்தத் தங்குமிடத்திற்கு சிறந்த Homestay விருதும் கிடைத்துள்ளது. மேலும் இங்கு வரும் சுற்றுப்பயணிகள் கெரோப்போக் லெக்கோணர் போன்ற பாரம்பரிய உணவு செய்முறையையும் கற்றுக்கொள்ள முடிகிறது.

* மேற்கண்ட தங்குமிடங்கள் அனைத்தும் ஆசியா அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளள்வை. இங்கு வரும் சுற்றுப்பயணிகள் தங்களின் நினைவலைகளை ருசிகரமான அனுபவங்களோடு நிரப்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here