புத்ராஜெயா:
அமைச்சரவை உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் அல்லது குறைக்கும் முன்மொழிவு நியாயமற்றது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
“ஓய்வூதியத்தை குறைப்பது குறித்து ஒற்றுமை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று கூறுபவர்கள் உள்ளனர், இது நியாயமானதல்ல என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் இது அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால், இது சடடத்திற்கு உட்பட்டு முழுமையாக ஆராய்ந்து ஆலோசிக்கப்பட வேண்டும்” என்று, இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர், நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்துச் செய்யப்பட்டால், ஒவ்வோர் ஆண்டும் நாட்டின் செலவை ஒவ்வொரு ஆண்டும் RM100 மில்லியன் முதல் RM150 மில்லியன் வரை அரசாங்கம் சேமிக்க முடியும் , என்று முன்னாள் கங்கார் நாடாளுமன்ற உறுப்பினர் நோர் அமீன் அஹ்மட் தெரிவித்திருப்பது குறித்து, விளக்கமளிக்கையில் பிரதமர் அவ்வாறு கூறினார்.
நாட்டின் தற்போதைய செயல்முறை மற்றும் ஓய்வூதியம் பெற தகுதியுடைய முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற செயலாளர்களுக்கு வருடத்திற்கு RM100 மில்லியன் முதல் RM150 மில்லியன் வரை செலவாகும் என்று நோர் அமீன் கூறியிருந்தார்.
முன்னாள் அமைச்சர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் வாகன ஒதுக்கீட்டை நான் ரத்து செய்தது, தற்போது அரசாங்கத்தின் செலவைக் குறைக்கும் ஒரு நடவடிக்கை என்று நாட்டின் நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார் கூறினார்.