ஜாலான் சீலாங் ஜெயாவில் உள்ள ஒரு கடை வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் 2 இலட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூலாய் மாவட்ட காவல்துறை தலைவர், தோக் பேங் ஏவ் தெரிவித்துள்ளார்.
அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 8) மாலை சுமார் 4.30 மணியளவில் நடந்த சோதனையின் போது, 25 வயதுடைய ஒருவரையும் போலீசார் கைது செய்ததாகவும், அங்கிருந்து சுமார் RM222,619 மதிப்புள்ள பல்வேறு வகையான பட்டாசுகளை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம்,” என்றார்.
கைது செய்யப்பட்ட உள்ளூர் ஆடவர், குறித்த வணிகம் தொடர்பில் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை மற்றும் அவரது வணிக உரிமத்திற்கான நிபந்தனைகளை கடைபிடிக்கத் தவறினார்.
குறித்த ஆடவர் இன்று திங்கள்கிழமை (ஜனவரி 9) தொடங்கி புதன்கிழமை (ஜனவரி 11) வரை மூன்று நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
வெடிபொருள் பொருள் சட்டம் 1957 இன் பிரிவு 8 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது RM10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் தோக் கூறினார்.