கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு தனது எல்லைகளைத் திறந்ததிலிருந்து, சீனாவிலிருந்து மொத்தம் 4,069 பயணிகள் அனைத்துலக நுழைவுவாயில்கள் ஊடாக நாட்டிற்குள் வந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்து பயணிகளிடமிருந்தும் இதுவரை கோவிட் -19 தொற்று நோய் தொடர்பான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை, உண்மையில் எந்த அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை என்று, சுகாதார துணை இயக்குநர் ஜெனரல் (பொது சுகாதாரம்) டத்தோ டாக்டர் நோர்ஹயாட்டி ருஸ்லி தெரிவித்தார்.
சீனாவில் இருந்து வரும் விமானங்களிலிருந்து கழிவு நீர் மாதிரிகள் எடுப்பது உள்ளிட்ட விஷயங்களை தமது துறை தொடர்ந்து கண்காணிக்கும் என்றார்.
“கோவிட் -19 இன் எந்தவொரு புதிய மாறுபாட்டையும் கண்டறிய பரிசோதனை மற்றும் கண்காணிப்பு எப்போதும் அதிகரிக்கப்படும்,” என்று அவர் இன்று நடந்த ஒரு சிறப்பு ஊடக சந்திப்பில் கூறினார்.
மேலும் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் மலேசியர்கள் இரண்டு பூஸ்டர் டோஸ்களையும் எடுத்துக்கொள்வதோடு, தடுப்பூசிகளை முழுமையாக போட்டு முடிக்கவும் அவர் அறிவுறுத்தினார்.