சாலைத் தடுப்பில் கார் மோதியதில், 26 வயது அரவிந்த் உயிரிழப்பு

புக்கிட் மெர்தாஜாம்:

இங்குள்ள ஜூருவுக்கு அருகே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 141 கிலோமீட்டரில், இன்று அதிகாலை சாலைத் தடுப்பில் கார் மோதியதில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார்.

இவ்விபத்தில் தோயோத்தா வியோஸ் காரை ஓட்டிச் சென்ற R.அரவிந்த் (26) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக, அதிகாலை 3.43 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் சிக்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர் என்று, இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சுமார் அரை மணி நேரம் கழித்து குறித்த ஓட்டுநர் காரிலிருந்து வெளியே எடுக்கப்பட்டதாகவும், அப்போது சம்பவ இடத்தில் இருந்த மருத்துவக் குழுவினர் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செபெராங் ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here