இரு வாகனங்களை உட்படுத்திய விபத்தில் சாலை போக்குவரத்து துறை அதிகாரி காயம்

நேற்று, இங்கு அருகே நியூ கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலைக்கு செல்லும் டாமான்சாரா டோல் பிளாசா அருகே இரு வாகனங்கள் மோதிய விபத்தில், சாலைப் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த (JPJ) அமலாக்க அதிகாரி ஒருவர் லேசான காயமடைந்தார்.

இரவு 10.10 மணியளவில்நடந்த சம்பவத்தில், இடது பக்க பாதையில் 41 வயதுடைய ஒருவர் ஓட்டிச் சென்ற பல்நோக்கு வாகனம் தோயோத்தா வெல்ஃபயர் கட்டுப்பாட்டை இழந்து, JPJ இன் தோயோத்தா ஃபார்ச்சூனர் மீது மோதியதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபக்ருடின் அப்துல் ஹமீட் கூறினார்.

மேலும் “சம்பவத்தின் போது, ​​JPJ வாகனம் ரோந்து பணியில் இருந்ததால், அது அவசர பாதையில் இருந்தது என்றும், அப்போது JPJ வாகனம் சாலையின் இடதுபுறமாக சறுக்கியது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த விபத்தில் JPJ வாகனத்தின் முன்பக்கத்தில் இருந்த 38 வயதான JPJ இன் அமலாக்க அதிகாரி ஒருவர் லேசான காயம் அடைந்தார் என்றும் அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 43(1)ன் படி விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள், போக்குவரத்து புலனாய்வு அதிகாரி, இன்ஸ்பெக்டர் முஹமட் ஹிஸ்யாம் அஜிஹை 017-7378705 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.