சீனப் புத்தாண்டுக் காலத்தில் 2,000 சாலைப் போக்குவரத்துத் துறை அமலாக்க அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள்

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்பு நடவடிக்கையில் மொத்தம் 2,000 சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) அமலாக்க அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

ஜனவரி 18 முதல் 27 ஆம் தேதி வரை, நாடு முழுவதும் தொடங்கும் கொண்டாட்ட நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் 14 முக்கிய இடங்களில் உள்ள அமலாக்க நிலையங்கள் மூலம் போக்குவரத்தை கண்காணிப்பதோடு, அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள சாலைப் போக்குவரத்துத் துறை பணியாளர்கள் விரைவுப் பேருந்துகளில் பயணிப்பார்கள் என்று அவர் கூறினார்.

மேலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் அதாவது சீனப் புத்தாண்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களுக்குப் பின்பும் சரக்கு வாகனங்கள் சாலைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்றும் லோக் கூறினார்.

“சாலை மற்றும் நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் கலப்பு போக்குவரத்தால் ஏற்படும் சாலை விபத்துகளின் அபாயங்களைத் தவிர்ப்பதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்துப் புள்ளிவிவரங்களைப் பொறுத்தவரை, 119 இறப்புகளுடன் மொத்தம் 11,325 சாலை விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டதாக லோக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here