வரும் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது மக்கள் மற்றும் சுற்றுச் சூழலின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தாத எரிபொருளைக் கொண்ட Pop-Pop, Happy Boom போன்ற பட்டாசுகளை வெடிக்க காவல்துறை அனுமதிக்கிறது என்று, சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், அபாயகரமான எரிபொருளைக் கொண்ட பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், அனைத்து கொண்டாட்டங்களிலும் பட்டாசுகளை வெடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் விதிக்கப்பட்டிருக்கும் தடையை வலியுறுத்தி இந்த நினைவூட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
“இருப்பினும் இந்த இரண்டு வகையான (Pop-Pop, Happy Boom) பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு, வியாபாரிகள் தத்தமது மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) அனுமதியை பெற வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
மேலும் அனுமதியின்றி பட்டாசுகளை விற்பனை செய்பவர்கள் மீது சிறு குற்றங்கள் சட்டம் 1955 (சட்டம் 207) பிரிவு 7 மற்றும் 8ன் படி ஏழாண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது RM10,000 அபராதம் விதிக்கப்படும்.
“தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் அல்லது பட்டாசுகளுடன் விளையாடுவது அல்லது வெடிப்பது ஒரு மாதத்திற்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது RM100 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தேவையற்ற செயல்கள் நடக்காமல் தடுக்க, சட்டத்தை மதித்து ஆபத்தான பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.