ஆடைக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் பிரதான சூத்திரதாரிக்கு போலீசார் வலைவீச்சு

சமீபத்தில் இங்குள்ள ஜாலான் 2/17 முத்தியாரா ஃபேடாசானில் உள்ள ஆடைக் கிடங்கில் இரண்டு தடவைகள் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான வழக்கின் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த விபத்துக் காரணமாக சுமார் RM10 இலட்சம் இழப்பு ஏற்பட்டது.

இந்த வழக்கின் பிரதான சந்தேக நபரான M2-3-14 ஜாலான் பண்டான் இண்டா, 6/1 பண்டான், 55100 கோலாலம்பூர் என்ற முகவரியைக் கொண்ட ,41 வயதான ஜி லோகேஸ்வரன் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.

இதுகுறித்து செந்தூல் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் பெஹ் எங் லாய் கூறுகையில், ஜனவரி 6ஆம் தேதி அதிகாலை 4.08 மணியளவில் ஆடைக் கிடங்கு தீ பற்றியதாக முதல் புகாரை அதன் 31 வயது மேலாளரிடம் (புகார்தாரர்) போலீசார் பெற்றனர்.

“கிடங்கின் முன்பகுதியில் மட்டும் ஏற்பட்டிருந்த தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதனையிட்டதில், அதிகாலை 3.06 மணியளவில் தீ பற்றியது கண்டுபிடிக்கப்பட்டது, அங்கு குறித்த சந்தேக நபர் சுவரில் ஏறி கிடங்கை நோக்கி எதையோ வீசுவது ஒரு காட்சி பதிவாகியிருந்தது. அதன் பிறகு அங்கு தீப்பிழம்புகள் காணப்பட்டன என்றார்.

“குறித்த ஆடைக் கிடங்குக்கு வெளியே உள்ள குளிர்சாதனப்பெட்டி, சோபா மற்றும் மின் சுவிட்ச் பாக்ஸ் என்பன சேதமடைந்ததில் RM4,000 இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 436 இன் படி விசாரணை நடத்தப்படுகிறது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஜனவரி 11 ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில், அதே கிடங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறைக்கு மற்றொரு புகார் கிடைத்தது.

இம்முறை கிடங்கின் பின்பகுதியில் தீச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தீயை தீயணைப்புப் படையினர் வெற்றிகரமாக அணைத்தனர், இருப்பினும் மலாய் ஆடைகள் எரிந்ததாகவும், அவற்றின் மொத்த இழப்பு RM15 இலட்சம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here