கனமழை அல்லது குறிப்பிடத்தக்க இடியுடன் கூடிய மழை பெய்தால், ஜோகூர், பகாங் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் 12 மணி நேரத்திற்குள் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பை நீர்பாசன மற்றும் வடிகால் துறை (DID) வெளியிட்டுள்ளது.
மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் மழைப்பொழிவு முன்னறிவிப்பு மற்றும் தென்கிழக்கு ஆசியா-ஓசியானியா ஃப்ளாஷ் வெள்ள வழிகாட்டுதல் அமைப்பு (SAOFFGS) என்பவற்றின் எதிர்வு கூறலின் அடிப்படையில் இந்த வெள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று, அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜோகூரில், ஜோகூர் பாருவில் உள்ள பிளெந்தோங் (Plentong) துணை மாவட்டம் இந்த திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்றும், அதனைத்தொடர்ந்து வெள்ள அபாயம் உள்ள பகுதிகளாக தஞ்சோங் சூரத், கோத்தா திங்கி, உலு சுங்கை ஜோகூர், செடிலி கெச்சில், உலு சுங்கை செடிலி பெசார், செடிலி பெசார் துணை மாவட்டங்கள் (கோத்தா திங்கி மாவட்டம்) மற்றும் மெர்சிங்கில் உள்ள ட்ரையாங் துணை மாவட்டம் என்பன அடங்கும்.
பகாங்கில், ரொம்பின் மாவட்டத்தில் உள்ள பொந்தியான் மற்றும் ரொம்பின் துணை மாவட்டங்கள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரவாக்கில் ஜாலான் லக்சமனா செங் ஹோ, தாமான் பாங் சின், செக்கோலா கெபாங்சான் (SK ) பத்து லிந்தாங் உள்ளிட்ட கூச்சிங்கின் பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளன.
“அனைத்து குடியிருப்பாளர்களும், குறிப்பாக ஆபத்தில் உள்ள பகுதிகளில் உள்ளவர்கள், திடீர் வெள்ளம் ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருக்க இந்த ஆயத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், தயவு செய்து அதிகாரிகள் வழங்கிய அறிவுரைகளை பின்பற்றுமாறும்” அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.









