மாநிலத் தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில், எதிர்வரும் ஜூன் 18ஆம் தேதிக்குப் பிறகு மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படும் என்று கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹமட் சனுசி முஹமட் நூர் தெரிவித்துள்ளார்.
இது புனித ரமலான் நோன்பு மாதம், ஐடில்பித்ரி கொண்டாட்டம், ஹஜ் பெருநாள், கெடாவின் சுல்தான் பிறந்தநாள் கொண்டாட்டம் போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டே ஜூன் 18 அன்று கெடா சட்டசபை கலைக்கப்படும் என்று, அவர் நேற்று இரவு மாநில அளவிலான சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
சட்டசபையை கலைப்பது தொடர்பில் பக்காத்தான் ஹராப்பானின் கீழ் உள்ள மாநிலங்களுடன் பாஸ் விவாதிக்காது என்றும், பாஸ் தலைமையிலான மூன்று மாநில அரசுகளான கெடா, கிளாந்தான் மற்றும் திரெங்கானுவில் உள்ள மாநிலச் சட்டசபைகளைக் கலைக்கும் தேதியை பாஸ் முடிவு செய்யும் என்றும் முஹமட் சனுசி கூறினார்.