நூருல் இஸாவின் நியமனம் குறித்து பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார் பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர்

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவரது மகளை தனது மூத்த பொருளாதாரம் மற்றும் நிதி ஆலோசகராக நியமிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.

“அன்வார் பிரதமராகப் பதவியேற்ற கடந்த சில மாதங்களில், நல்லாட்சிக்கு ஏற்ப பல விஷயங்களைச் செய்துள்ளார், தற்போதைய முறையில் மாற்றங்களைச் செய்துள்ளார். இதுவே அவரது நோக்கம்.

“இதற்காக மக்கள் அவரை நேசிக்கிறார்கள், அவர் எந்த ஊழல் வழக்குகளிலும் சிக்காதவர் – ஆனால் இந்த நியமனம் அவர் செய்த அனைத்து நன்மைகளையும் ஒரே நொடியில் இல்லாது ஆக்கிவிடக்கூடும்,” என்று அவர் கூறினார்.

நூருல் இஸா ஒரு நம்பகமான தலைவராக இருந்த போதிலும், அவரது நியமனம் அவரின் தந்தையின் கீழ் நேரடியாக கொண்டுவர முயற்சிப்பது பிரதமரின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு முரணானது என்றும், இந்த கருத்தை நான் ஒரு நண்பராகவும், பிகேஆர் உறுப்பினராகவும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி உறுப்பினராகவும், ஒரு வழக்கறிஞராகவும் இருந்து கொண்டே இதனைக் கூறுகிறேன்” என்று, இன்று (பிப். 1) கம்போங் ஸ்ரீ பஹாகியா, தாமான் மோலேக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

அன்வாருக்கு ஏற்கனவே இரண்டு துணை அமைச்சர்கள் மற்றும் நிதியமைச்சகத்தில் திறமையான அரசு ஊழியர்கள் இருப்பதால், நூருல் இசாவை மற்ற அமைச்சகங்களில் நிஜமித்திருக்கலாம் என்று ஹசன் மேலும் கூறினார்.

நூருல் இஸா நாட்டின் நல்ல எதிர்காலத் தலைவர் – மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக அரசியலில் நன்கு அனுபவம் கொண்டவர், பொதுக் கணக்குக் குழுவின் உறுப்பினரான அவர் சிறந்த கல்வியறிவு மற்றும் அனுபவம் கொண்டவர், அவரின் இந்த நியமத்தை மறுபரிசீலனை செய்யச் சொல்லுவது, அவருடைய திறமையை நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று கருத்தல்ல, மாறாக பிரதமரின் செயற்பாடுகளில் ஏதேனும் மாசு படிந்துவிடக்கூடாது என்ற நல்ல எண்ணமே என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here