சபாவில் வெள்ளம் காரணாமாக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை சற்று அதிகரித்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (JPBN) செயலகம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு நிவாரண மையங்களில் தஞ்சமடைந்த 151 குடும்பங்களைச் சேர்ந்த 478 பேருடன் ஒப்பிடும்போது, இன்று காலை 8 மணி நிலவரப்படி,165 குடும்பங்களைச் சேர்ந்த 535 பேராக உயர்ந்துள்ளது.
இவர்கள் அனைவருக்கு அங்குள்ள 9 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அது மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜோகூரில், காலை 8 மணி நிலவரப்படி, அங்குள்ள எட்டு நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை 264 குடும்பங்களைச் சேர்ந்த 925 பேராக மாறாமல் உள்ளது.
பத்து பகாட் மற்றும் சிகாமாட் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இன்று வானிலை வெயிலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனாலும் பத்து பகாட்டில் உள்ள சுங்கை பெக்கோக்கில் நீர்மட்டம் இன்னும் 18.80 மீற்றர் அபாய அளவைத் தாண்டிய நிலையிலேயே உள்ளது.
இதற்கிடையில், சரவாக்கில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 72 பேர் சிரியானில் உள்ள நிவாரண மையத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அம்மாநில மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
நேற்று இரவு முதல் பெய்த கனமழையை தொடர்ந்து, அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.