மலேசிய – சிங்கப்பூர் துவாஸ் சோதனைச் சாவடியில் சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் கடத்தப்படவிருந்த 800 கிலோவுக்கும் அதிகமான மெல்லும் புகையிலையை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர்.
முதல் சம்பவத்தில், கடந்த ஜனவரி 11ஆம் தேதி துவாஸ் சோதனைச் சாவடியில் (ICA) அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 113 கிலோக்கிராம் மெல்லும் புகையிலை மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட லோரியின் கேபினின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைத்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக, கடந்த சனிக்கிழமை ICA தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.
அதேபோல ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஜனவரி 16 அன்று, அதே சோதனைச் சாவடியில் மற்றொரு மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட லோரியின் ஸ்கேன் செய்யப்பட்ட படங்களில் முரண்பாடுகளை ICA அதிகாரிகள் கண்டறிந்ததாகவும், அதனைத் தொடர்ந்து லோரியை சோதனை நடத்தியதில் அதன் சரக்குகளில் 749 கிலோ மெல்லும் புகையிலை இருப்பதை கண்டுபிடித்தனர்.
இரண்டு வழக்குகளும் மேலதிக விசாரணைகளுக்காக சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
மெல்லும் புகையிலை சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.