ஈப்போவில் சுமார் 180,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்; ஒருவர் கைது

பண்டார் யுனிவர்சிட்டி ஸ்ரீ இஸ்கந்தரில் உள்ள ஒரு வீட்டில், வெள்ளிக்கிழமை (பிப்.10) போலீசார் நடத்திய சோதனையில், சுமார் 184,800 ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு பிராண்டுகளின் 11,550 கார்டன்கள் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக, பேராக் காவல்துறை தலைவர், டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி தெரிவித்தார்.

பொதுமக்களின் தகவலின் அடிப்படையில், கடையாக பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் குறித்த வீட்டில் நடந்த சோதனையில், 43 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

“ஜாலான் ஈப்போ-லுமுட்டில் போலீசார் மேற்கொண்ட கடத்தல் தடுப்பு நடவடிக்கையின்போது, ​​​​குழு சந்தேகத்திற்கிடமான முறையில் செலுத்தப்பட்ட ஒரு புரோத்தோன் எக்ஸோரா காரைக் கண்டது. கார் குறித்த வீட்டின் முன் நிறுத்தப்படும் வரை போலீசார் பின்தொடர்ந்தனர், அங்கு சந்தேக நபர் வளாகத்திற்குள் இருந்து பல பெரிய பெட்டிகளை எடுத்து காரில் வைத்தார்,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

அதனைத்தொடர்ந்து, அந்த வளாகம் மற்றும் காரை சோதனை செய்ததில் 231 பெரிய பெட்டிகளில் 11,550 கார்டன்கள் கொண்ட பல்வேறு பிராண்டுகளின் சிகரெட்டுகள் சுங்க வரி இல்லாமல் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் சந்தேக நபரிடமிருந்து ஒரு புரோத்தோன் எக்ஸோரா கார், இரண்டு கைத்தொலைபேசிகள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

“சந்தேக நபர் நேற்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சுங்கச் சட்டம் 1967 பிரிவு 135(1)(d)-ன் படி விசாரிக்கப்பட்டு வருகிறது” என்றும், மாநிலத்தில் சிகரெட் கடத்தல் கும்பலை அடையாளம் காண மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here