கெத்தும் நீர் விற்பனையாளர் ஒருவர் நான்காவது முறையாக போலீசாரால் கைது

கடந்த புதன்கிழமை தாமான் மேடானில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, கெத்தும் நீரை விற்றதற்காக பலமுறை கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், 30 வயது இளைஞர் நான்காவது முறையாக கைது செய்யப்பட்டார் என்று, பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபக்ருடின் அப்துல் ஹமீட் கூறினார்.

குறித்த ஆடவர் குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான 10 முந்தைய பதிவுகளைக் கொண்டவர் என்றும், 2017 முதல் 2019 வரை மூன்று முறை அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றும் ஃபக்ருடின் மேலும் கூறினார்.

“மாலை 6 மணியளவில் கெடும் நீரை பதப்படுத்தும் போது, அந்த இளைஞரும் அவரது நண்பர்கள் நால்வரும் பிடிபட்டனர், அவர்களிடமிருந்து கெத்தும் நீர் என சந்தேகிக்கப்படும் திரவம் நிரப்பப்பட்ட 92 பிளாஸ்டிக் போத்தல்கள் (ஒவ்வொன்றும் 1,500ml), 50 கிலோகிராம் எடையுள்ள கெத்தும் இலைகள் கொண்ட 10 பிளாஸ்டிக் பொட்டலங்கள் மற்றும் சில உபகரணங்களை போலீசார் கைப்பற்றினர். ”என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு போத்தல் கெத்தும் தண்ணீர் RM15 க்கு விற்கப்படுகிறது, மேலும் நாட்டின் வடக்குப் பகுதியிலிருந்து கெத்தும் இலைகள் பெறப்படுகின்றன என்றும், கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் 23 முதல் 37 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், அவர்களுக்கு நிரந்தர வேலை இல்லை என்றும் அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் விஷச் சட்டம் 1952 இன் பிரிவு 30(3) இன் கீழ், விசாரணைக்கு உதவும் பொருட்டு பிப்ரவரி 18 வரை நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here