விவேக் போன்றே மயில்சாமியும் திடீர் மரணம்: சிரிக்க வைத்தவர்களுக்கு இப்படியொரு முடிவா?

ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் மயில்சாமி. கடந்த 1984ம் ஆண்டு வெளியான தாவணிக் கனவுகள் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த மயில்சாமி பின்னர் கவனிக்கப்படும் நகைச்சுவை நடிகர் ஆனார்.

டூயட், வால்டர் வெற்றிவேல், நேருக்கு நேர், ஜேம்ஸ் பாண்டு, பெண்ணின் மனதை தொட்டு, சீனு, தில், 12பி, உன்னை நினைத்து, ஏப்ரல் மாதத்தில், தூள், ஜெயம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். வடிவேலு, விவேக் ஆகியோருடன் சேர்ந்து காமெடி காட்சிகளில் வந்துள்ளார்.

தூள் படத்தில் திருப்பதியில் லட்டுக்கு பதில் ஜிலேபி தான் கொடுக்கிறார்கள் என்று கூறி விவேக்கை மயில்சாமி ஏமாற்றிய காட்சி இன்றளவும் பிரபலம். இப்படி தன் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த மயில்சாமிக்கு இன்று அதிகாலை திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

ஏதோ ஒரு மாதிரியாக இருக்கிறது என்று கூறிய மயில்சாமியை உடனே போரூரில் இருக்கும் ராமசந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மயில்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 மயில்சாமியின் மரண செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு வயது 57.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here