வரவு செலவுத் திட்டம் 2023: அரசு ஊழியர்களுக்கு RM700 நோன்புப் பெருநாள் சிறப்பு நிதி உதவி

அரசாங்கத்தில் பணிபுரியும் கிரேடு 56 மற்றும் அதற்குக் கீழ் உள்ள அரசு ஊழியர்கள், புனித ரமலான் நோன்புப் பெருநாளுக்கு RM700 சிறப்பு நிதி உதவியைப் பெறுவர்.

அதே நேரத்தில் ஒப்பந்த அடிப்படையில் அரசாங்கத்தில் பதவி வகிக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோர் நோன்புப் பெருநாள் சிறப்பு நிதி உதவியாக RM350-ஐ பெறுவார்கள் என்று, பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று வெள்ளிக்கிழமை (பிப். 24) நாடாளமன்றத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தபோது, கூறினார்.

இந்த சிறப்புக் கொடுப்பனவுகள் வரும் ஏப்ரல் மாதம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு அண்மையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியே மற்றும் சிரியாவில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து தேடல் மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கும் ஒரு நாளைக்கு RM100 சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

“இந்த உதவித்தொகை மனிதநேயத்தின் பெயரில் அவர்களின் பங்களிப்புகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் பாராட்டுக்கான அடையாளம்” என்று அவர் தனது உரையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here