நேற்று மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், சுகாதார அமைச்சகத்திற்கு கூடுதலாக RM200 மில்லியனை அரசாங்கம் ஒதுக்கியது, இதன் மூலம் சுகாதார அமைச்சகத்திற்கான மொத்த ஒதுக்கீடு RM36.3 பில்லியனாக அதிகரித்துள்ளது என்று பிரதமர் கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் முந்தைய அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே சுகாதார அமைச்சகத்திற்கு RM36.1 பில்லியனை ஒதுக்கியிருந்தது, ஆனாலும் கூடுதலாக ஒதுக்கப்பட்ட RM200 மில்லியனின் பெரும்பகுதி மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் ஏனைய பொருட்கள் வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும் என்று நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.
மேலும் அரசு மருத்துவமனைகளில் நிலவும் நெரிசலை நிவர்த்தி செய்வதற்கான பல நடவடிக்கைகளை அன்வார் அறிவித்தார், அதில் நோயாளிகளை நெரிசலான மருத்துவமனைகளில் இருந்து பல்கலைக்கழகம், இராணுவம் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்புவதன் மூலம் பொதுச் சுகாதார திறனை மேம்படுத்தலாம் என்றார்.








