பியாங்யங்: வட கொரியாவில் கடுமையான உணவுப்பஞ்சம் ஏற்பட்டிருப்பதை அடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறிதது அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வட கொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசு என்ன கூறினாலும் அதை அந்நாட்டு மக்கள் எந்தவொரு எதிர்க்கேள்வியும் இல்லாமல் அப்படியே செய்ய வேண்டும். மீறுபவர்களுக்கு மரணம் நிச்சயம்.
மேலும், வட கொரியாவில் இணையதளம் கூட கிடையாது. ஒரே ஒரு தொலைக்காட்சி சேனல்தான் அங்கு இயங்கி வருகிறது. அதிலும் அதிபரின் உரையும், அவரது பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்படும். இதனால் வடகொரியாவில் என்ன நடந்தாலும் அது வெளியுலகுக்கு தெரியவராது.
அடுத்தடுத்து ஏவுகணைச் சோதனை குறிப்பாக, கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் வைரஸ் பாதிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் வடகொரியாவில் உயிரிழந்ததாக அனைத்த நாட்டு ஊடகங்களும் தெரிவித்தன. ஆனால், இது உண்மையா, இல்லையா என்று கூட அந்நாட்டு அரசு தெரிவிக்கவில்லை. இதனிடையே, தனது எதிரி நாடான தென் கொரியாவையும், அதற்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளையும் மிரட்டும் வகையில் தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வட கொரியாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதுகுறித்து கவலைப்படாமல் அந்நாடு தொடர்ந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைச் சோதனைகளை வட கொரியா நடத்தியது. இதற்கு பல்லாயிரம் கோடி பணத்தை அந்நாட்டு அரசு செலவிட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்திருக்கின்றன.
இவ்வாறு ஆயுதங்கள் மீதே கவனம் செலுத்தி வந்த வட கொரிய அரசு, தனது நாட்டு மக்களின் நலனில் பெரிதாக அக்கறை காட்டவில்லை. இதனால் தற்போது வட கொரியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. பருவம் தவறி பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்குள்ள உணவுப் பயிர்கள் நாசமாகின. மேலும், போதிய நிதி இல்லாததால் வெளிநாடுகளில் இருந்து உணவுப்பொருட்களை கூட வட கொரியாவால் வாங்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால உணவு இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் அங்கு கொத்து கொத்தாக உயிரிழந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், உணவுப் பஞ்சத்தை சீர்செய்வது தொடர்பாக மூத்த அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவரச ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் உணவு உற்பத்தியை பெருக்குவது குறித்தும், விவசாயத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. விவசாயம் குறித்து வட கொரியாவில் ஆலோசனை நடைபெறுவது இதுவே முதன்முறை ஆகும்.





























