ஜோகூரின் ஆறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி 2,162 பேராக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நண்பகல் 1 மணி நிலவரப்படி 5,878 பேராக அதிகரித்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
ஆறு மாவட்டங்களில் முன்னர் 25 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மொத்தமாக 54 தற்காலிக நிவாரண மையங்கள் செயற்பாட்டிலுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குறித்த ஆறு மாவட்டங்களாக ஜோகூர் பாரு, கூலாய், கோத்தா திங்கி, குளுவாங், பொந்தியான் மற்றும் சிகாமாட் ஆகியவை அடங்கும் என்றும் அப்பகுதியிலுள்ள ஆறுகள் ஏற்கனவே அபாய அளவைக் கடந்துள்ளன என்றும் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்டுள்ள அந்தஅறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.