மூன்று மாநிலங்களில் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 42,459 பேராக சற்றுக் குறைந்துள்ளது

வெள்ளம் பாதித்த ஜோகூர், பகாங் மற்றும் மலாக்கா ஆகிய மூன்று மாநிலங்களில் வெள்ளம் காரணமாக குடியிருப்புக்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று காலை 8 மணி நிலவரப்படி 42,909 பேராக இருந்து, இன்று நண்பகல் 2 மணி நிலவரப்படி 42,459 பேராக சற்றுக் குறைந்துள்ளது.

இவர்கள் அனைவரும் மூன்று மாநிலங்களிலுமுள்ள 235 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பேரிடர் மேலாண்மை குழு செயலகம் தெரிவித்துள்ளது.

ஜோகூரில், இன்று காலை 8 மணி நிலவரப்படி 39,620 பேராக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை, இன்று நண்பகல் 2 மணி நிலவரப்படி 39,315 பேராகக் குறைந்துள்ளது.

மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் கூற்றுப்படி, சிகாமாட் மாவட்டத்தில் வெள்ள நிலைமை மேம்பட்டு வருகிறது, ஆனால் பத்து பகாட், மூவார் மற்றும் தாங்காக் மாவட்டங்களில் வெள்ளம் காரணமாக குடியிருப்புக்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஜோகூரில் தற்போதைய வெள்ளம் இதுவரை 6 பேரின் உயிரை பலி கொண்டுள்ளது.

பகாங்கில், இன்று காலை 8 மணி நிலவரப்படி 2,684 பேராக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை, இன்று நண்பகல் 2 மணி நிலவரப்படி 2,538 பேராகக் குறைந்துள்ளது.

மலாக்காவில்,  இன்று காலை 161 குடும்பங்களைச் சேர்ந்த 605 பேராக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை, இன்று நண்பகல் 2 மணி நிலவரப்படி 506 பேராகக் குறைந்துள்ளது என்று அம்மாநில பேரிடர் மேலாண்மை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here