சிங்கப்பூர் அல்லது மலேசியாவிலிருந்து துவாஸ் சோதனைச் சாவடி வழியாகச் செல்வோருக்கு பரபரப்பான நேரங்களில் வழங்கப்பட்ட சலுகை மீட்டுக்கொள்ளப்படுகிறது என்று, சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய நடைமுறை மார்ச் மாதத்திலிருந்து நடமுறைக்கு வருகிறது என்றும், தற்போது பரபரப்பான நேரங்களில் அறவிடப்படும் கட்டணம், இனி நாள் முழுவதும் நீட்டிக்கப்படுவதாகவும் அது தெரிவித்தது.
மேலும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதில் மாற்றமில்லை என்றும் அது குறிப்பிட்டது.
அண்மையில் மலேசியாவின் தஞ்சோங் குபாங் சாலைக் கட்டணத்தில் செய்யப்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, அதற்கு ஈடான கட்டணத்தை வசூலிக்கும் சிங்கப்பூரின் நீண்டகாலக் கொள்கையின்படி இந்த மாற்றம் இடம்பெறுவதாக ஆணையம் மேலும் கூறியது.
புதிய மாற்றத்தின்படி கார் ஓட்டுபவர்கள் நாள் முழுவதும் $2.10 கட்டணம் செலுத்த வேண்டும். அத்தோடு கனரக சரக்கு வாகனங்களுக்கு நாள் முழுவதும் $11.30 கட்டணம் அறவிடப்படும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டில் பதிவு செய்த வாகனங்கள் சிங்கப்பூரில் நுழைவதற்கு நிலப் போக்குவரத்து ஆணையத்தின் வாகன நுழைவு அனுமதி அட்டை, ஒப்புதல் அளிக்கப்பட்ட மின் அஞ்சலை வைத்திருக்க வேண்டும். அத்தோடு வலுவிலுள்ள ‘ஆட்டோபாஸ்’ அட்டையும் வைத்திருக்கவேண்டும் என்றும் அது நினைவுபடுத்தியது.
வாகன நுழைவு அனுமதியில்லாதவர்கள் ஆணையத்தின் ‘OneMotoring’ இணையத்தளம் வழியாக அதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.