ஜோகூரில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டதாக நம்பப்படும் சாரா கும்பலைச் சேர்ந்த ஐவர் கைது

ஜோகூரில் கும்பல் கொள்ளை, வழிப்பறி, வீடு புகுந்து திருட்டு போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் சாரா கும்பலைச் சேர்ந்த ஐவர், கடந்த வாரம் இங்குள்ள கெம்பாஸில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் 41 முதல் 57 வயதுக்குட்பட்ட உள்ளூர் ஆண்கள் என்றும், அந்த கும்பல் கெம்பாஸ் பகுதியில் உள்ள ஒரு விநியோக நிறுவனத்தின் கடைக்குள் புகுந்து, CCTV கேமரா (சிசிடிவி) டிகோடர் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை கடந்த பிப்ரவரி 24 அன்று திருடிச்சென்றனர் என்றும், இதனால் அந்நிறுவனம் RM1,300 நஷ்டத்தை சந்தித்தது என்றும், வட ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறை பதில் தலைவர், ஃபரிஸ் அம்மார் அப்துல்லா தெரிவித்தார்.

மேலும் குறித்த சாரா கும்பல், கத்திகளுடன் ஆயுதம் ஏந்தி தாமான் தம்போய் இண்டா குடியிருப்புப் பகுதியில் இருவரைக் காயப்படுத்தியதாகவும், பின்னர் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவத்தின் விளைவாக, பாதிக்கப்பட்டவர் ஜோகூர் பாருவின் சுல்தானா அமினா மருத்துவமனையில் (HS) சிகிச்சை பெற்றார் மற்றும் வெட்டு காயங்கள் காரணமாக அவரது கைகள், உடல் மற்றும் தோள்களில் 20 தையல்கள் போடப்பட்டன என்றார்.

மேலும் “ஒரு மளிகைக் கடையில் கத்திகள் மற்றும் போலி துப்பாக்கிகளுடன் சென்ற இந்த சாரா கும்பல் அந்த கடையை கொள்ளையடித்து, மொத்தமாக RM10,000 நஷ்டத்தை ஏற்படுத்தியதுடன் அந்தக் கடை ஊழியர்களின் பணம் மற்றும் மொபைல் போன்கள் உட்பட பல மதிப்புமிக்க பொருட்களை எடுத்துச் சென்றது.

“மேற்கூற்ப்பட்ட மூன்று சம்பவங்களின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், வட ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறை, கெம்பாஸில் உள்ள ஒரு வீட்டில் இருந்த ஐந்து சந்தேக நபர்களை வெற்றிகரமாக கண்டுபிடித்து, கைது செய்துள்ளது.

இந்தச் சோதனையில், பாதிக்கப்பட்டவர்களுடையதாகக் கருதப்படும் இரண்டு போலி கைத்துப்பாக்கிகள், 13 மொபைல் போன்கள், ஒரு சிசிடிவி டிகோடர், அடையாள அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த மாத தொடக்கத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.

அனைத்து சந்தேக நபர்களும் ஆரம்ப சிறுநீர் பரிசோதனையில் மெத்தப்பேட்டமைனுக்கு சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

“சாரா கும்பலைக் கைது செய்ததன் மூலம், வடக்கு மற்றும் தெற்கு ஜோகூர் பாரு, மூவார் மற்றும் வடக்கு கிள்ளான் ஆகிய இடங்களில் உள்ள சுமார் 10 வழக்குகளை போலீசார் வெற்றிகரமாக தீர்த்து வைத்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here