போதைப்பொருள் வாங்க பணம் தரமறுத்த 65 வயது தாயாரை சரமாரியாக தாக்கிய மகன் கைது

தானா மேரா, கம்போங் குவால் ஜெடோக்கில் உள்ள ஒரு வீட்டில் நேற்று நடந்த ஒரு சம்பவத்தில், போதைப்பொருள் வாங்கக் கேட்ட RM20 பணம் கிடைக்காததால் கோபமடைந்த மகன் தனது தாயை அடித்தது அதிர்ச்சியளிக்கிறது.

முன்னாள் இராணுவ வீரரான சந்தேக நபர்,32 தாக்கியத்தில், அவரது 65 வயதான தாயாருக்கு தலை, நெற்றி மற்றும் கண்களில் வீங்கிய காயங்கள் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக தானா மேரா மருத்துவமனையில் வெளிநோயாளர் பிரிவில் அவர் சிகிச்சை பெற்றார் என்றும், தானா மேரா மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் ஹக்கி ஹஸ்புல்லாஹ் கூறினார்.

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில், சந்தேகநபரின் சகோதரருக்கு அவரது மைத்துனரிடமிருந்து சம்பவம் தொடர்பான காணொளி பதிவு கிடைத்ததையடுத்து, நேற்று மாலை 5.08 மணிக்கு காவல்துறையில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்ததாக அவர் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில்,சந்தேக நபர் தனது தாயுடன் தனியாக வசித்து வருகிறார் என்றும், அவர் தாயாரை அடித்ததுடன் அவரின் முகத்தை மிதித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

“போதைமருந்துகள் வாங்குவதற்காக அவரது தாயிடம் RM20 கேட்டதாகவும், தாயார் கேட்ட பணத்தை கொடுக்காததால் சந்தேக நபர் கோபமடைந்ததை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபர் மனநலம் குன்றிய நபருக்கான (OKU) அட்டை வைத்திருக்கிறார் என்றும்,”சிறுநீர் பரிசோதனையின் முடிவில், சந்தேகநபர் Methamphetamine போதைப்பொருளுக்கு சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டது மற்றும் அவருக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான முந்தைய இரு குற்றப் பதிவுகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.

மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர் நேற்று முதல் நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here