கட்டாயத்தின்பேரில் பிச்சையெடுத்து வந்த கம்போடிய நாட்டைச் சேர்ந்த மூன்று மாற்றுத்திறனாளிகள் (OKU) நேற்று இரவு அலோர் ஸ்டார் காவல்துறையினரால் காப்பாற்றப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட மூன்று ஊனமுற்ற நபர்களும் கெடா குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களால் மீட்கப்பட்டனர்.
பின்னர் கெடா காவல் படைத் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு, ஆய்வாளர் ரோஸ்லிசுல் அம்ரி தலைமையில் நேற்றிரவு 10 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட Ops Pintas (பிச்சைக்காரர்கள்) நடவடிக்கையில், சந்தேகத்திற்கு இடமான நிலையில் ஒரு காரை நிறுத்தினர்.
நிரந்தர குடியுரிமை பெற்ற ஒருவரால் ஓட்டப்பட்ட அந்தக் காரில் மேற்கொண்ட சோதனையின் விளைவாக, 45 முதல் 47 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்களை போலீசார் இனங்கண்டனர்.
கெடா காவல்துறைத் தலைவர் டத்தோ வான் ஹாசன் வான் அஹ்மட் கூறுகையில், சந்தேக நபர் ஜோகூரிலுள்ள ஒரு முகவரியை வசிப்பிடமாக கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது, மேலும் அவர் குறித்த மூன்று மாற்றுத்திறனாளிகளை பிச்சை எடுக்க வைத்து இலாபம் ஈட்டிவருகிறார் என போலீசார் நம்புகின்றனர் என்றார்.
அவர்களிடமிருந்து கேடா மாநிலத்தின் இரவு சந்தைகளின் பட்டியல், கைத்தொலைபேசிகள் மற்றும் பாஸ்போர்ட்கள் அடங்கிய கருப்பு நிற பையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர் பிச்சை எடுத்ததன் விளைவாக பெறப்பட்டது சந்தேகிக்கப்படும் RM1,020 மதிப்புள்ள ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
சந்தேக நபர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரும்ஜோகூர், உலு திராமில் வசிப்பதாக நம்பப்படுகிறது என்றும், சம்பந்தப்பட்ட மூன்று பேரும் உலு திராம் ஜோகூர் கம்போடிய சமூக கிராமத்தில் இருந்து சுமார் 10 நாட்களுக்கு முன்பு சந்தேக நபரால் சந்தையில் பிச்சை எடுப்பதற்காக, அலோர் ஸ்டாருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் வான் ஹாசன் கூறினார்.
உண்மையில், சந்தேக நபர் சிம்பாங் எம்பட்டில் ஒரு மாதத்திற்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, மூன்று பேரையும் பிச்சை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.