பேராக், மஞ்சோங் நீர் விநியோகப் பிரச்சினை ஏப்ரல் 8 ஆம் தேதிக்குள் முழுமையாகத் தீர்க்கப்படும்

மஞ்சோங் மற்றும் பேராக் தெங்கா மாவட்டங்களில் உள்ள குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கியுள்ள தண்ணீர் விநியோக பிரச்சனை, வரும் ஏப்ரல் 8 ஆம் தேதிக்குள் முழுமையாக தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேராக் உள்கட்டமைப்பு, எரிசக்தி, நீர் மற்றும் பொதுப் போக்குவரத்துக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் நிசார் ஜமாலுடின் கூறுகையில், கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 31) முதல் இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்போது ஒப்பந்ததாரரால் பழுதுபார்க்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

“பழுதுபார்ப்பு செயல்முறையானது மீட்பு மற்றும் நிறுவல் போன்ற கட்டமைப்பு வேலைகளை உள்ளடக்கியது என்றும், இது ஒப்பீட்டளவில் அதிக செலவுகளுடன் கூடுதலாக நேரத்தையும் எடுக்கும்” என்றார்.

“நடக்கும் பணிகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 4) 50% நீர் விநியோகம் சீர் செய்யப்படும் என்று பேராக் நீர் வாரியம் (LAP) எதிர்பார்க்கிறது என்றும், நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பம்ப் ஹவுஸை மேம்படுத்த பேராக் நீர் வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் குறித்த மேம்படுத்தும் செயல்முறை செயல்படுத்தப்படுவதற்கு முன்பே, எதிர்பாராத சேதம் ஏற்பட்டது என்றும் முகமட் நிசார் கூறினார்.

பழுதுபார்ப்புக்கான செலவை முழுவதுமாக மாநில அரசே ஏற்கும் என்றும், பழுதுபார்க்கும் பணிகள் முழுமையாக முடிந்த பிறகே உண்மையான செலவு தெரியவரும் என்றும், மண் நகர்வு காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

மண் நகர்வு சம்பவத்தின் விளைவாக மொத்தம் 79,360 நீர் கணக்கு பயனர்கள், கடந்த வெள்ளிக்கிழமை முதல் மஞ்சோங் மற்றும் பேராக் தெங்கா மாவட்டங்களில் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடைகளை அனுபவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here