பேராக், மஞ்சோங்கில் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மேற்கொண்ட Ops Tiris நடவடிக்கையின் கீழ், மானிய விலையில் டீசல் கடத்தும் செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் நால்வரைக் கைது செய்தனர்.
குறித்த நான்கு சந்தேக நபர்களும் நேற்று காலை 11 மணியளவில் மஞ்சோங்கிற்கு அருகில் உள்ள ஒரு மீனவ கிராமத்திற்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து RM96,279.15 மதிப்புள்ள மானிய விலை டீசலை கைப்பற்றியதாகவும், பேராக் KPDN இயக்குனர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் கூறினார்.
அமலாக்க அதிகாரிகள் இரண்டு வளாகங்களைச் சோதனை செய்ததில், டீசல் என்று நம்பப்படும் திரவம் கொண்ட ஐந்து தொட்டிகளைக் கண்டுபிடித்ததாகவும், சேமிப்பு வளாகத்தில் மானிய விலை டீசல் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை கையாளுவதற்குரிய ஆவணங்கள் இல்லை,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் 58,351 லிட்டர் என மதிப்பிடப்பட்ட டீசல் மற்றும் வளாகத்தில் உள்ள பிற உபகரணங்களும் அமலாக்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன என்றும் , இந்த வழக்கு விநியோக கட்டுப்பாடு சட்டம் 1961 மற்றும் விநியோக கட்டுப்பாடு விதிகள் 1974ன் கீழ் விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.