வங்காளதேச சுற்றுலாப் பயணிகள் மற்றும் இங்கு வரும் தொழிலாளர்களுக்கு விசா வழங்குவது தொடர்பாக லஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள மலேசிய தூதரகத்தின் அமலாக்க முகமை அதிகாரிகள் இருவர் தடுப்புக்காவல் செய்யப்பட்டனர். ஒரு பெண்ணும், ஆடவரும் மலேசியாவுக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டு, இன்று வரை மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அவர்கள் இன்னும் விடுவிக்கப்பட்டார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சந்தேகத்திற்குரிய இருவரின் வங்கிக் கணக்குகள் சம்பந்தப்பட்ட “சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை” கண்டுபிடித்துள்ளதாக தெரிந்த வட்டாரங்கள் கூறின.
MACC ஆனது 20க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாகவும், இரண்டு அதிகாரிகளுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் RM3.1 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சொத்துக்களில் எட்டு நிலங்கள் அடங்கும்.
எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கியை தொடர்பு கொண்டபோது, அதிகாரிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து, எம்ஏசிசி சட்டத்தின் பிரிவு 17(ஏ) மற்றும் பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி பிரிவு 4(1) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதற்குப் பிறகு வேறு பல கைதுகள் செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை நான் நிராகரிக்கவில்லை என்று அவர் கூறினார்.

விசாரணைக்கு உதவுவதற்காக சித்தி லியானா சகிஜன் என்ற நபரையும் எம்ஏசிசி தேடி வருவதாகவும், அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி ஜெயராஜ் ராஜனை 016-6371082 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கூறினார்.
மனிதவளத்துறை அமைச்சர் வ.சிவகுமாரிடம் எம்ஏசிசி இரண்டு முறை விசாரணை நடத்தியதை தொடர்ந்து வெளிநாட்டு பணியாளர் ஆட்சேர்ப்பு தொடர்பான விசாரணையை அடுத்து இந்த கைதுகள் வந்துள்ளன. எம்ஏசிசி தனது விசாரணை தொடர்பாக சிவகுமாரின் மூத்த அதிகாரிகள் இருவரையும், தொழிலதிபரையும் கடந்த வாரம் கைது செய்தது. அந்த மூவரும் ஞாயிற்றுக்கிழமை விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.









